10 நிமிடத்திற்கு நாடற்ற ஒரு குழந்தை பிறக்கின்றது – ஐநா

Wednesday, November 4, 2015admin
asath
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் நாடற்ற குழந்தையொன்று பிறப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாடற்ற சிறுவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. சிரியாவில் தொடரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகள் நெருக்கடி இந்த நிலைமையை மேலும் மோசமாக்குவதாக ஐநா கூறியுள்ளது மருத்துவ பராமரிப்பு, கல்வி மற்றும் தொழில்வாய்பை பெற முடியாத நிலைமைகள், நாடற்ற சிறுவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிரச்சினைகள் மோதல்களால் பாதிக்கப்பட்ட குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கு இடையில் அதிகம் காணப்படுவதாக ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் கூறியுள்ளது. சிரியாவில் தந்தை ஊடாகவே குழந்தையொன்று பிரஜாவுரிமையை பெற முடியும் என்பதுடன், சிரியாவில் தொடரும் மோதல்களால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள அதேவேளை 25 வீதமான குடும்பங்கள் தந்தையரை இழந்துள்ளதாக ஐநா சுட்டிக்காட்டியுள்ளது. உலகில் 20 நாடுகள் அதிகளவில் நாடற்றவர்களின் சனத்தொகையை கொண்டுள்ளதாகவும் குறைந்தது ஒவ்வொரு ஆண்டும் 70 ஆயிரம் நாடற்ற குழந்தைகள் பிறப்பதாகவும் ஐநா கூறியுள்ளது.