விவசாயிக்கு உதவிக்கரம்: ட்வீட்டாளர்களை நெகிழவைத்த கருணாகரன்!!

Friday, March 18, 2016admin
asath

தஞ்சை விவசாயிக்கு சத்தமின்றி உதவிக்கரம் நீட்டிய நடிகர் கருணாகரனை ட்வீட்டர்வாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு படம் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு லட்ச ரூபாய் அளவில் விவசாயிகளுக்கு உதவுவேன் என்று சொன்னதைச் செய்து காட்டியதைக் குறிப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளனர்.

விவசாயி பாலனை டிராக்டரில் இருந்து இறக்கி போலீஸார் தாக்கிய வீடியோ பதிவு சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வந்தது. இதனை பலரும் கண்டித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மேலும், விஜய் மல்லையை மையப்படுத்தியும் இதில் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், விவசாயி பாலனின் கடனை அடைக்க அவருடைய வங்கிக் கணக்கில் 1 லட்சம் ரூபாயைச் செலுத்தி இருக்கிறார் நடிகர் கருணாகரன். அவருடைய இச்செயலுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

என்டிடிவி செய்தி இணையதளத்தில் விவசாயி பாலன் தாக்கப்பட்டது குறித்த செய்தியோடு அவருடைய வங்கிக் கணக்கு அடங்கிய விவரமும் செய்தியாளரால் ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனை ட்விட்டர் தளத்தில் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.

அந்த ட்வீட்டை கவனித்த நடிகர் கருணாகரன், தமிழக விவசாயி குறித்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்ததற்கு நன்றியும், அந்த வங்கிக் கணக்கில் தாம் ரூ.1 லட்சம் ஆன்லைனிலேயே செலுத்தியதையும் பதில் ட்வீட்டாக பதிந்தார். கருணாகரனின் இந்த அணுகுமுறை ட்வீட்டாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

இதனிடையே, விவசாயி பாலனுக்கு நடிகர் விஷாலும் உரிய உதவிகளை செய்வதற்கான நடவடிக்கையில் முழுவீச்சில் இறங்கியதும் கவனிக்கத்தக்கது.