விஜய் மல்லையா மீது நடவடிக்கை: அருண் ஜேட்லி உறுதி!!

Thursday, March 10, 2016admin
asath

விஜய் மல்லையா விவகாரத்தால் எழுந்த விவாதத்துக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ‘சாத்தியமாகக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.

அவர் மேலும் கேள்வி நேரத்தின்போது கூறும்போது, நவம்பர் 2015 வரை மல்லையா வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை ரூ.9,000 கோடி என்றார்.

முன்னதாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், அரசும், பாரத ஸ்டேட் வங்கியும் ஏன் உரிய நேரத்தில் விரைவாகச் செயலாற்றி அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் செய்யவில்லை என்றும் அவர் கேட்டார்.

கார்கே கேள்விகள் அனைத்து உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்ளும் கேள்விகளே என்ற ஜேட்லி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் மல்லையாவுக்கு வங்கிக் கடன்கள் அளிக்கப்பட்டது என்றார்.

“அதாவது கணக்கு விவரங்களின் படி, செப்டம்பர் 2004-ல் வங்கிகள் கூட்டமைப்பு முதல் கடன் தொகையை வழங்கியுள்ளது. இந்தத் தேதியே அனைத்தையும் தெளிவுபடுத்துகிறது” என்றார்.

மல்லையா தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டது எப்படி என்று ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு சூசகமாக பதில் அளித்த ஜேட்லி, குவாட்ரோச்சி தப்பிச் சென்றதை நினைவூட்டினார்.

காங்கிரஸ் சரமாரி கேள்வி:

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியபோது, “ரொட்டி திருடினால் அவரை அடித்து உதைத்து சிறையில் தள்ளுகிறோம். ஒரு பெரிய தொழிலதிபர் ரூ.9,000 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியுள்ளார், அவர் முதல் வகுப்பில் தப்பிச் செல்ல நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?” என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, #BJPhelpedMallyaFlee என்ற ஹேஷ்டேக் மூலம் மல்லையா நாட்டை விட்டுத் தப்பி ஓடுவதற்கு பாஜக துணைபுரிந்ததாக பதிவுகளைக் கொட்டி வருகிறது.

சிபிஐ எச்சரிக்கை விடுத்தபோதும், மல்லையாவின் பாஸ்போர்ட்டை பாஜக அரசு ஏன் முடக்கவில்லை என்று அந்தக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடனுக்கான தவணை செலுத்தத் தவறிய விவசாயியை, போலீஸார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவத்தை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ், மிகப் பெரிய தொழிலதிபரை தப்ப விடுவது நியாயமா என்று கேள்வி எழுப்பி, அதில் மல்லையாவின் படத்தையும் பகிர்ந்துள்ளது.

வெளிநாடு தப்பிய மல்லையா:

முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியேறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்தி தெரிவித்தார்.

இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவுக்கு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

அவர் நாட்டை விட்டு ஏற்கெனவே வெளியேறி இருந்தால் லண்டனில் உள்ள தூதரகத்தின் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம், அவரது மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் இணையதள முகவரிக்கு அனுப்ப அல்லது கடன் மீட்பு தீர்ப்பாயம் மூலம் அனுப்பவும் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அண்மையில் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கி அவரை கைது செய்ய வேண்டும் என்று எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் விஜய் மல்லையாவிற்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறியது. இதைத் தொடர்ந்து தான் பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.