வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை குறித்து ஆராயப்படும் – பிரதமர்

Friday, January 15, 2016admin
asath

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் அளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடபகுதியிலுள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் இராணுவத்திடம் உள்ள காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்

அத்துடன் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளாக காணப்படுவோருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் பிரதமர் உரையாற்றியிருந்ததுடன், இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மற்றும் பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளதாகவும் அந்த அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் உறுப்பினர்களை போல் அல்லாது வடக்கிலுள்ள இராணுவத்தினர் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாண்டின் நடுப்பகுதியில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.