ரஷ்யாவில் துபாய் விமானம் வெடித்துச் சிதறியது!!

Monday, March 21, 2016admin
asath

ரஷ்யாவில் நேற்று காலையில் தரையிறங்கிய துபாய் விமானம், ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றதால் வெடித்துச் சிதறி அதிலிருந்த 2 இந்தியர்கள் உட்பட 62 பேர் பலியாயினர்.

துபாய் விமான போக்கு வரத்துக்கழகத்தின் பிளைதுபாய் நிறுவனத்துக்கு சொந்தமான எப்.இசட்.981 (போயிங் 737 ரக) விமானம், துபாயிலிருந்து தெற்கு ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகருக்கு சென்றுகொண் டிருந்தது. நேற்று காலையில் ரோஸ்டோவ் விமான நிலையத் தைச் சென்றடைந்தபோது மோசமான வானிலை நிலவியது.

இதனால் தரையிறங்காமல் வானத்தில் வட்டமடித்த அந்த விமானம், 2-வது முறையாக தரையிறங்க முயற்சி செய்தபோது ஓடுபாதையை விட்டு விலகியதால் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது பயங்கர தீப்பிழம்பு ஏற்பட்டதை உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின.

இந்த விபத்து குறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறும்போது, “விமானத்தில் 55 பயணிகளும் 7 ஊழியர்களும் இருந்ததாகக் கூறப் படுகிறது. இவர்கள் அனைவரும் விபத்தில் பலியாயினர்” என்றார். இந்த தகவலை பிளைதுபாய் விமான நிறுவனமும் தனது முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. விபத்தில் பலியான வர்களில் இந்தியாவைச் சேர்ந்த அஞ்சு கதிர்வேல் ஐயப்பன் மற்றும் மோகன் ஷ்யாம் ஆகிய இருவரும் அடங்குவர் என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ரஷ்யா (44), உக்ரைன் (8), உஸ்பெகிஸ்தான் (1) நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.