யாழில் மழையால் 76,000 பேர் வரை இடம்பெயர்வு, பல வீடுகள் சேதம்

Monday, November 16, 2015admin
asath

யாழ் மாவட்டத்தில் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரம் வரை அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நிலையம் தெரிவித்துள்ளது.

21 ஆயிரத்து 437 குடும்பங்களைச் சேர்ந்த 76 ஆயிரத்து 673 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு, சொந்த வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், 118 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன் ஆயிரத்து 812 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ள நிலையில், வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் சொந்த வீடுகளுக்கு திரும்புவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிகமாக தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிவருகின்றது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 537 குடும்பங்களைச் சேர்ந்த 2028 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 12 நலன்புரி முகாம்களிலும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 3 நலன்புரி நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 348 குடும்பங்களைச் சேர்ந்த 1229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 840 குடும்பங்களைச் சேர்ந்த 2000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் 3200 குடும்பங்களைச் சேர்ந்த 11,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 2396 குடும்பங்களைச் சேர்ந்த 9046 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

தற்காலிக இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.