பிரஸல்ஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சகோதரர்கள்!!

Wednesday, March 23, 2016admin
asath

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் உள்ள ஜவென்டம் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை மனித வெடிகுண்டு தாக்குதலில் 34 பேர் உடல் சிதறி பலியானார்கள். சுமார் 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்தத் தாக்குதலை காலித் மற்றும் இப்ராஹிம் எல் பக்ராவ் ஆகிய இருவரும் நடத்தியிருக்கலாம் என அந்நாட்டு செய்தி நிறுவனமான ஆர்டிபிஎப் தெரிவித்துள்ளது.

சகோதரர்களான இவர்கள் இருவரும் பிரஸல்ஸ் நகரில் கடந்த வாரம் போலியான பெயரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். அந்த இடத்தில் நடத்திய சோதனையில், கைது செய்யப்பட்டுள்ள அப்தெஸ்லாமின் கை ரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரீஸ் தாக்குதலில் தேடப்பட்டு வந்த அப்தெஸ்லாமை போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இது பெல்ஜியம் நாட்டின் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என கருதப்பட்டது.

சூட்கேஸில் வெடிகுண்டு

இதனிடையே விமான நிலையத்திலிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை சூட்கேஸில் மறைத்து கொண்டுவந்து வெடிக்கச் செய்திருக்கலாம் என்று அந்நாட்டு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு டாக்சியில் வந்த 3 பேர் சூட்கேஸுடன் விமான நிலையத்தில் இறங்கி உள்ளனர். பின்னர் 3 பேரும் தனித்தனியாக தங்களது உடமைகளை ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. அதன் பிறகுதான் குண்டுகள் வெடித்துள்ளன.