பாரிஸ் தாக்குதலை நடத்திய ஆயுததாரிகள் பயன்படுத்திய பகுதிகளில் தேடுதல்

Tuesday, November 17, 2015admin
asath

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சில் தாக்குதல்களை நடத்திய ஆயுததாரிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அந்த நாட்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சலாஹ் அப்டிஸ்லாம் என்ற இளைஞர் காரொன்றை வாடகைக்கு பெற்றிருந்ததாக பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கை சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குறித்த இளைஞரும் மற்றுமொரு தாக்குதல்தாரியான அவரின் சகோதரரும் தொடர்மாடியொன்றையும் இரண்டு ஹோட்டல் அறைகளையும் வாடகைக்கு எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

129 பேரின் உயிர்களை காவுகொண்ட இந்த தாக்குதலுக்கு ஐ எஸ் ஆயுததாரிகள் உரிமை கோரியுள்ள நிலையில், உயிரிழந்த 117 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாரிஸ்சின் வட பிராந்தியத்தில் இருந்து குறித்த இளைஞர் வாடகைக்கு பெற்றிருந்த காரை கண்டுபிடித்துள்ள பொலிஸார், இந்த காரை பயன்படுத்தி தாக்குதல்தாரிகள் அழைத்துவரப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.

பாரிஸ்சில் நடத்தப்பட்ட தாக்குதல் பெல்ஜியத்திலேயே திட்டமிடப்பட்டதாக பிரான்ஸ் பிரதமர் நேற்றுமுன்தினம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.