நாசா பரிசோதனை வெற்றி!!

Thursday, March 10, 2016admin
asath

வேற்று கிரகங்களில் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கும் வெப்ப தடுப்பு கவச தொழில்நுட்பத்தை நாசா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது.

செவ்வாய் கிரகம் உட்பட வேற்று கிரங்கள் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக பல விண் கலங்களையும் செலுத்தி உள்ளது. எனினும், வேற்று கிரகத்தில் விண் கலத்தை தரையிறக்கி ஆராய்ச்சி செய்வதில் பல சிக்கல்கள் நீடிக்கின்றன. குறிப்பாக வேற்று கிரகத்தின் ஈர்ப்பு விசை, அதிகப்பட்ச வெப்ப நிலை போன்றவற்றால் விண்கலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

வேற்று கிரகத்தின் எல்லைக்குள் நுழையும் போது, அங்குள்ள கடும் வெப்பத்தால் விண்கலம் எரிந்து போகலாம். அல்லது வேற்று கிரகத்தின் ஈர்ப்பு விசையால் விண் கலம் தரையில் மோதி சேதம் அடைய வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, நாசாவின் லாங்லே ஆராய்ச்சி மைய இன்ஜீனியர்கள் புதிய தொழில்நுட்பத்தை கண்டு பிடித்துள்ளனர்.

அதன்படி, பாராசூட் போல செயல்படும் வகையில் வட்ட வடியில் (டோநட் போல) ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு டாரஸ் என்று பெயரிட்டுள்ளனர். ஹைபர்சோனிக் இன்பிளாடபிள் ஏரோடைனமிக் டிசெலரேட்டர் (எச்ஐஏடி) என்ற இந்த தொழில் நுட்பத்தின் மூலம் டாரஸ் கருவி பாராசூட் போல விண்கலத்தை மெதுவாக வேற்று கிரகத்தில் தரை யிறக்கும். அத்துடன் வேற்று கிரகத்தின் கடும் வெப்பத்தில் இருந்து விண்கலத்தை பாதுகாக்கும் கவசமாகவும் செயல்படும்.

இந்தக் கருவியை ராக்கெட்டில் பொருத்துவது, அதில் இருந்து கழற்றுவது போன்ற பரிசோதனைகளை நாசா வெற்றிகரமாக செய்துள்ளது. மேலும், சிறிய அளவிலான டாரஸ் கருவி மூலம் வேற்று கிரகத்தில் விண்கலத்தை தரையிறக்குவது போல பரிசோதனை நடத்திப் பார்த்தது. இதில் குறிப் பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து பெரிய அளவில் டாரஸ் கருவியை செய்து ராக்கெட் டுடன் இணைத்து விண்கலத்தை செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இந்தக் கருவி செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தை தரையிறக்கும் போது பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.