சுமந்திரனின் குற்றச்சாட்டுக்களுக்கு சிவி.விக்னேஸ்வரன் பதில்

Tuesday, November 17, 2015admin
asath

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் அதன் யாழ் நாடாளுன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை முதலில் ஆதரித்த சுமந்திரன், பின்னர் அது தவறானது என குறிப்பிட்டதாக வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நடைபெற்றதை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் அமைந்திருந்ததாகவும், அது ஒரு சமூக ஆவணம் என்பதால் எவ்வாறான சட்டநடவடிக்கை என்பதை ஐநா செயலாளரே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழரசு கட்சியே தம்மை அழைத்துவந்ததாகவும், வட மாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை வழங்கியதாகவும் சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டையும் சிவி விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பல கட்சிகளை கொண்ட பதிவுசெய்யப்படாத கூட்டணி என குறிப்பிட்ட சிவி.விக்னேஸ்வரன், சகல கட்சிகளும் இணைந்து அழைத்தால் மாத்திரமே அரசியலுக்கு வருவது குறித்து பரிசீலிப்பேன் என தாம் கூறியதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் ஏனைய கட்சிகளைப் போல தமிழரசுக் கட்சியும் இந்த கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதன்அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட்டு 133000 திற்கும் அதிகமான வாக்குகளை தாம் பெற்றதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படவில்லை என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள சிவி.விக்னேஸ்வரன், தாம் எந்தவொரு கட்சியிலும் நடைமுறை உறுப்பினராக இல்லை என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தமிழரசு கட்சியோ வேறு எந்தவொரு கட்சியோ தமது கூட்டங்களுக்கு தம்மை அழைக்கவில்லை எனவும் வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

பெருவாரியாக வாக்களித்த வடமாகாண மக்களே தமது கட்சி எனக் குறிப்பிட்ட சிவி.விக்னேஸ்வரன் வடமாகாண மக்களின் நன்மையே தமது கட்சியின் குறிக்கோள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடல்நலக் குறைவுகாரணமாக தாம் கனடாவிற்கான பயணத்தை தவிர்த்ததாகவும் தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக அறிக்கை விடுத்ததாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் அவ்வாறு அறிக்கைகளை வெளியிடவில்லை என குறிப்பிட்ட வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன்,கட்சிகளைச் சேராத தாம் தேர்தல் காலத்தில் நடுநிலை வகித்தமை தவறில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து சிவிவிக்னேஸ்வரனை நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் எம்.ஏசுமந்திரன் கூறியிருந்த நிலையில், வடமாகாண முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்களுக்கான பதில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.