கொல்கத்தாவில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலம் இடிந்து விழுந்தது!!

Thursday, March 31, 2016admin
asath

கொல்கத்தாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்து 18 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

மதியம் 12.30 மணியளவில் புரா பஜார் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பாலத்தின் கீழே கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. பாதசாரிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

பாலத்தின் கீழே ஏராளமான கடைகள் இருந்தன. அந்த கடைகளும் அப்பளமாக நொறுங்கின. போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த 5 போலீஸாரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் பல டன் எடையுள்ள இரும்பு தூண்கள் சரிந்து விழுந்திருப்பதால் அவற்றை தீயணைப்பு படையினரால் அகற்ற முடியவில்லை.

உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. அதன்படி ராணுவத்தின் இன்ஜினீயரிங் பிரிவைச் சேர்ந்த 500 வீரர்கள் ராட்சத கிரேன் மற்றும் அதிநவீன கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் சம்பவ பகுதியில் முகாமிட்டுள்ளனர்.