காதலியை சுட்டுக்கொலை செய்த ஒலிம்பிக் வீரர் சிறையிலிருந்து வீட்டுக் காவலிற்கு மாற்றம்

Monday, October 19, 2015admin
asath
தனது காதலியை சுட்டுக் கொலை செய்த குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பராலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் ஓட்ட வீரரான ஒஸ்கா பிஸ்டோரியசை வீட்டுக் காவலில் வைக்குமாறு தென்னாபிரிக்க பரோல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் தனது காதலியை படுகொலை செய்த குற்றச்சாட்டை ஒஸ்கா பிஸ்டோரிஸ் எதிர்கொண்டிருந்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதுவரை 12 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்துவந்த ஒஸ்கா பிஸ்டோரியஸ் சிறையிலிருந்து விடுவித்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து வீட்டுக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு கால்களிலும், முழங்காலிற்கு கீழ்ப் பகுதியை இழந்த அவர், கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இரும்பினாலான கால்களைப் பொருத்தியே கலந்துகொண்டிருந்தார்.