ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு திட்டம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

Monday, October 19, 2015admin
asath
ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு நடவடிக்கை திட்டம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என துருக்கி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். புலம்பெயர்வோரின் வருகையை கட்டுப்படுத்தினால் துருக்கியர்களுக்கான விசாவை தாராளமயமாக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு புதிய உத்வேகம் அளிப்பதுடன், மேலதிக உதவிகளை வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். எவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை திட்டம், தற்போதும் வரைபு வடிவத்திலேயே உள்ளதாக துருக்கி வெளிவிவகார அமைச்சர் (Feriduh Sinirlioglu சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட நிதி சார்ந்த விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர்வோர் நெருக்கடி தொடர்பான ஐரோப்பாவின் நிலைப்பாடுகள் குறித்து துருக்கி ஜனாதிபதி ரைய்ப் எர்டோகன் முன்னர் விமர்சனம் வெளியிட்டிருந்தார். 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக அவர்கள் விடுக்கும் அறிவிப்பிற்கு நோபல் பரிசும் பரிந்துரைக்கப்படும் என அவர் கூறியிருந்தார். ஆத்துடன் தமது நாட்டில் இரண்டரை மில்லியன் அகதிகள் உள்ளதாகவும் அது குறித்து எந்தவொருவரும் கவனம் எடுப்பதில்லை எனவும் துருக்கி ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.