எகிப்து விமானத்தில் கடத்தல் காரருடன் புகைப்படம் !!

Thursday, March 31, 2016admin
asath

சமீபத்தில் கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில், பணயக்கைதியாக இருந்த பிரிட்டைனைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று பிரபலமாகி வருகிறது. அதன் காரணம், அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது, விமானத்தைக் கடத்தியவருடன்.

சில நாட்களுக்கு முன்பு ஈஜிப்ட்ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடத்தப்பட்டு சைப்ரஸில் தரையிறக்கப்பட்டது. ஆனால் இதில் தீவிரவாதிகள் யாரும் சம்பந்தப்படவில்லை. முஸ்தஃபா என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரே இதற்குக் காரணம். அவரும் கைதுசெய்யப்பட்டார்.

இந்தக் கடத்தல் சம்பவத்தின்போது, பணயக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்த, பிரிட்டைனைச் சேர்ந்த பெஞ்சமின் இன்னெஸ் என்பவர், முஸ்தஃபாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இது பற்றி பேசிய பெஞ்சமின், “அவர் ஏன் விமானத்தைக் கடத்தினார் எனத் தெரியவில்லை. நான் ஜாக்கிரதையாக இருந்தேன், ஆனால் அந்த நிலையில் சிறிது உற்சாகமாகவும் இருக்க நினைத்தேன். அவர் வயிற்றில் கட்டியிருந்த வெடிகுண்டு நிஜமாக இருக்கும் பட்சத்தில் நான் இழக்க எதுவுமில்லை. அந்த மனநிலையில் தான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். வெடிகுண்டு என்று அவர் கட்டியிருந்த உடையை அருகில் சென்றும் பார்த்தேன்” என்றார்.

58 வயதான முஸ்தஃபா தற்போது 8 நாட்களில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனது முன்னாள் மனைவியையும், குழந்தைகளையும் பார்க்கவே விமானத்தை கடத்தி திசை திருப்பி தரையிறங்கச் சொன்னதாக முஸ்தஃபா போலீஸில் தெரிவித்தார்.

முஸ்தஃப்பாவை மனநலம பாதிக்கப்பட்டவர் எனக் கூறும் அதிகாரிகள், அவர் மீது விமானக் கடத்தல், பொறுப்பற்ற – அச்சுறுத்தும் நடத்தை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சைப்ரஸில் இருக்கும் முஸ்தஃபாவை ஒப்படைக்குமாறு எகிப்து அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. முஸ்தஃபா இதற்கு முன்பே குற்றச் செயல்கள் புரிந்து ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.