இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

Tuesday, November 17, 2015admin
asath

இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் மற்றும் சர்வதேச உறவுகளை புதுப்பித்தல் உள்ளிட்ட விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆறு வருடங்களுக்கு பின்னர் நடத்தப்பட்;ட இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார நல பேரவையின் சந்திப்பில் இந்த வரவேற்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தேசிய நல்லிணக்கம், நல்லாட்சியை வலுப்படுத்தல், ஊழலை ஒழித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை ஊக்குவித்தல் மற்றும் சட்டவாட்சி உள்ளிட்ட வியடங்களில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார நல பேரவை வரவேற்றுள்ளது.

எவ்வாறாயினும் முரண்பாடுகளுக்கான அடிப்படை காரணங்கள் குறித்து அனைத்து தரப்பில் சார்பிலும் நடவடிக்கை எடுப்பதுடன், சமதானத்திற்கான அத்திவாரத்தை உருவாக்கும் வழிமுறையாக கடந்த கால விடயங்களை அரசியல் தலைமைகள் கையாள வேண்டும் எனவும் பேரவை வலியுறுத்தியுள்ளது.