இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்: கனடா பிரதமர் கடும் கண்டனம்!!

Monday, April 4, 2016admin
asath

கனடாவில் இந்திய சீக்கியர் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் இனவெறியுடன் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடும் கண்டனம் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் சுப்னீந்தர் சிங் கேஹ்ரா (29). தற்போது இவர் கனடாவின் டோராண்டோ அருகே புறநகர் பகுதியான பிராம்ப்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அண்மையில் தனது நண்பர்களுடன் வெளியே சென்ற சுப்னீந்தர் சிங் அன்றிரவு குயிபெக் நகரில் இருந்து தனது வீட்டுக்கு செல்ல டாக்ஸிக்காக காத்திருந்தார். அப்போது ஒரு காரில் குடிபோதையுடன் தள்ளாடியபடி வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சுப்னீந்தர் சிங்கின் தலைப் பாகையை சுட்டி காண்பித்து இனவெறியுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

ஒரு கட்டத்தில் அந்த நான்கு பேரும் சுப்னீந்தர் சிங்கை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சுப்னீந்தர் சிங்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து அவர் கூறும்போது, ‘‘முதலில் எனது கண்களை நோக்கி அந்த கும்பலில் இருந்த ஒருவன் குத்துவிட்டான். அதில் வலி தாங்க முடியாமல் நான் கீழே விழுந்ததும், மற்றவர்கள் என்னை காலால் எட்டி உதைத்தனர். நிறம், இனம் மற்றும் நான் அணிந்திருந்த தலைப்பாகை ஆகியவற்றால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்றார்.

அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இந்தியர் மீதான இந்த இனவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனவெறிக்கு கனடாவில் மக்கள் இடம் அளிக்கக் கூடாது என்றும் இத்தகைய செயல்களுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மற்றொருவர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.