இங்கிலாந்து – பாகிஸ்தானுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு

Monday, October 19, 2015admin
asath
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெறுவதை இங்கிலாந்து அணி மயிரிழையில் தவறவிட்டுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இன்றைய இறுதி நாளில் 99 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது 4 விக்கெட் இழப்பிற்கு 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்திருந்தது. போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 523 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. பதிலுக்கு தனது முதல் இன்னிஸ்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 598 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 75 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸ்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க தடுமாறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 173 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து. அதிகபட்சமாக மிஸ்பா உல் ஹக் 51 ஓட்டங்களையும் யூனூஸ் கான் 45 ஓட்டங்களையும் பெற்றதுடன், ஆதில் ரஷீட் ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இதனையடுத்து 99 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 9 தசம்2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், சுல்பிக்கார் பாபர் மற்றும் சொஹைய்ப் மாலீக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ்சில் 263 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்யெடார் குக், போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்டதுடன், மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் 2 ஆவது போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.