ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா: தோனி, கோலி, தவான் அதிரடி!!

Sunday, March 6, 2016admin
asath

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே தாகாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. மழையால் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை விரட்ட களமிறங்கிய இந்திய அணி, 2-வது ஓவரிலேயே ரோஹித் சர்மாவை (1 ரன்) இழந்தது. அடுத்த சில ஓவர்கள் நிதானித்த கோலி – தவான் இணை 5-வது ஓவரிலிருந்து அதிரடி ஆட்டத்தைத் துவங்கியது.

5-வது ஓவரில் 3 பவுண்டரி உட்பட 14 ரன்களும், 6-வது ஓவரில் 15 ரன்களும் சேர்ந்தன. அதே நேரத்தில் ஷகிப் உல் ஹசன், மறுபக்கம் நசிர் உசைன், மொர்டாஸா, டஸ்கின் அகமது ஆகியோர் ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தினர். 10 ஓவர்களில் சரியாக 71 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணிக்கு, அடுத்த 5 ஓவரகளில் 50 ரன்கள் தேவையாயிருந்தது. அடுத்த 2 ஓவர்களில் தவான் 3 பவுண்டரிகளையும், கோலி 2 பவுண்டரிகளையும் விளாச, 26 ரன்கள் சேர்ந்தது. தவான் 35 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

அந்த கட்டத்தில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்களை கொடுத்திருந்த டஸ்கின் அகமது மீண்டும் பந்துவீச வந்தார். அவரது முதல் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே வர 4-வது பந்தில் தவான் ஆட்டமிழந்தார் (60 ரன்கள், 44 பந்துகள்).

2 ஓவர்களில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி களமிறங்கினார். 14-வது ஓவரை அல் அமின் உசைன் வீச, முதல் பந்து, தோனியின் வழக்கமான விளாசலில் சிக்ஸருக்கு பறந்தது. அடுத்த பந்தில் ஒரு ரன் வர, 3-வது பந்தை சந்தித்த கோலி 3 ரன்கள் எடுத்தார். 4-வது பந்தை பவுண்டரிக்கு விளாசிய தோனி , 5-வது பந்தை மீண்டும் சிக்ஸருக்கு விளாச இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆசியக் கோப்பையை வென்றது. தோனி 6 பந்துகளில் 20 ரன்களும், கோலி 28 பந்துகளில் 41 ரன்களும் எடுத்திருந்தனர்.

ஆசிய கோப்பையை இந்தியா வெல்வது இது 6-வது முறையாகும்.