அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

Tuesday, November 17, 2015admin
asath

தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

அனைவரையும் அதிகபட்சமாக ஒரு வருடகால புனர்வாழ்விற்கு உட்படுத்தி விடுதலை செய்வதாக அரசாங்க தரப்பில் இருந்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கைதிகள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஒன்பது நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில்,நேற்று சிறைச்சாலைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரியிருந்தார்.

அத்துடன் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், புலம்பெயர்வாழ்ந்துவரும் தமிழர்கள் மற்றும் மக்களும் இணைந்து கைதிகளின் போராட்டத்தை கைதிகள் விடுதலையாகும் வரை எடுத்துச் செல்வதாகவும் அவர் உறுதி மொழி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதாக அரசாங்க தரப்பில் இருந்து வழங்கப்பட்ட உறுதிமொழியை கருத்தில் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக கைதிகள் அறிவித்துள்ளனர்.

ஏவ்வாறாயினும் அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாவிடின் மீண்டும் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கைதிகள் எச்சரித்துள்ளனர்.

இதுவரை 34 தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.