அத்துமீறும் இந்திய மீனவர்களின் வலைகளை வெட்டியெறிய உத்தரவு?

Monday, October 19, 2015admin
asath
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் வலைகளை வெட்டியெறியுமாறு விரைவில் உத்தரவிடப்போவதாக மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து இலங்கையில் ஆங்கில அச்சு ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.   இதற்கென இலங்கை படையினரின் உதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   அத்துமீறி நுழையும் மீனவர்களை கைதுசெய்தல், படகுகளை கைப்பற்றுவது போன்ற நடவடிக்கைகளால் எவ்வித பலனும் ஏற்படப்போவது இல்லை எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   மேலும் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் எந்தவொரு படகையும் விடுவிக்கப்போவது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.   இதேவேளை இந்த பிரச்சினை குறித்து இரு நாடுகளினதும் மீனவர் அமைப்புகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காததை தொடர்ந்து மேலும் பேச்சுக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.   இதனடிப்படையில் இந்தித் தூதுவருக்கும் மீன்பிடித்துறை அமைச்சருக்கும்  இடையில் இவ்வாரம் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும். இதன் பின்னர் அமைச்சர் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் 120 நாட்களுக்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியபோதிலும் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு வெளியிட்டது பின்னர் 83 நாட்களுக்கு அனுமதி வழங்குமாறு இந்தியா மற்றுமொரு கோரிக்கையை முன்வைத்தது எனினும் அதற்கும் இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.