5000 க்கும் அதிகமான காணாமல் போனோரின் விபரங்கள் ஐநாவிடம் கையளிப்பு

Tuesday, November 17, 2015admin
asath

இலங்கையில் காணாமல் போன 5000 திற்கும் அதிகமானவர்களின் விபரங்களை உள்ளடக்கிய அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் போனோர் தொடர்பான நடவடிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா குழுவினரிடம் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர்களின் முன்னணியினால், இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்து, மேற்கொள்ளவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பதாக ஐநா நடவடிக்கை குழுவின் உறுப்பினர் ஆரியல் டுலிட்ஸ்கி (Ariel Dulitzky) கூறியுள்ளார்.

இந்த அறிக்கை கையளிக்கும் நிகழ்வில் காணாமல் போனவர்களின் சில உறவினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஐநா நடவடிக்கை குழுவினர் கடந்த வாரம் கொழும்பில் சந்திப்புக்களை ஆரம்பித்திருந்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நேரில் சென்று காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்திருந்தனர்.

ஐதேக ஆட்சியில் தமிழருக்கு எதிராக யுத்தம் முன்னெடுக்கப்பட்டது – பிரதமர்

Tuesday, November 17, 2015admin
asath

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தம் காரணமாக, முக்கியமான குடிமக்களை இலங்கை இழக்க வேண்டி ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாயிரம் இலங்கையர்களுக்கு இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, அரசியல் காரணங்கள் மற்றும் இனவாதம் ஆகியவற்றினாலேயே பெரும்பாலான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1983 ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தை அடுத்து பெரும்பாலான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் இதனால், நாட்டின் முக்கியமான குடிமக்களை இழக்க நேரிட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான சிங்கள மக்கள் அரசியல் காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறியதுடன், மதவாதத்தால் முஸ்லீம் மக்களும் இலங்கையில் இருந்து வெளியேறியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

Tuesday, November 17, 2015admin
asath

இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் மற்றும் சர்வதேச உறவுகளை புதுப்பித்தல் உள்ளிட்ட விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆறு வருடங்களுக்கு பின்னர் நடத்தப்பட்;ட இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார நல பேரவையின் சந்திப்பில் இந்த வரவேற்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தேசிய நல்லிணக்கம், நல்லாட்சியை வலுப்படுத்தல், ஊழலை ஒழித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை ஊக்குவித்தல் மற்றும் சட்டவாட்சி உள்ளிட்ட வியடங்களில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார நல பேரவை வரவேற்றுள்ளது.

எவ்வாறாயினும் முரண்பாடுகளுக்கான அடிப்படை காரணங்கள் குறித்து அனைத்து தரப்பில் சார்பிலும் நடவடிக்கை எடுப்பதுடன், சமதானத்திற்கான அத்திவாரத்தை உருவாக்கும் வழிமுறையாக கடந்த கால விடயங்களை அரசியல் தலைமைகள் கையாள வேண்டும் எனவும் பேரவை வலியுறுத்தியுள்ளது.

சுமந்திரனின் குற்றச்சாட்டுக்களுக்கு சிவி.விக்னேஸ்வரன் பதில்

Tuesday, November 17, 2015admin
asath

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் அதன் யாழ் நாடாளுன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை முதலில் ஆதரித்த சுமந்திரன், பின்னர் அது தவறானது என குறிப்பிட்டதாக வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நடைபெற்றதை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் அமைந்திருந்ததாகவும், அது ஒரு சமூக ஆவணம் என்பதால் எவ்வாறான சட்டநடவடிக்கை என்பதை ஐநா செயலாளரே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழரசு கட்சியே தம்மை அழைத்துவந்ததாகவும், வட மாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை வழங்கியதாகவும் சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டையும் சிவி விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பல கட்சிகளை கொண்ட பதிவுசெய்யப்படாத கூட்டணி என குறிப்பிட்ட சிவி.விக்னேஸ்வரன், சகல கட்சிகளும் இணைந்து அழைத்தால் மாத்திரமே அரசியலுக்கு வருவது குறித்து பரிசீலிப்பேன் என தாம் கூறியதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் ஏனைய கட்சிகளைப் போல தமிழரசுக் கட்சியும் இந்த கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதன்அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட்டு 133000 திற்கும் அதிகமான வாக்குகளை தாம் பெற்றதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படவில்லை என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள சிவி.விக்னேஸ்வரன், தாம் எந்தவொரு கட்சியிலும் நடைமுறை உறுப்பினராக இல்லை என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தமிழரசு கட்சியோ வேறு எந்தவொரு கட்சியோ தமது கூட்டங்களுக்கு தம்மை அழைக்கவில்லை எனவும் வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

பெருவாரியாக வாக்களித்த வடமாகாண மக்களே தமது கட்சி எனக் குறிப்பிட்ட சிவி.விக்னேஸ்வரன் வடமாகாண மக்களின் நன்மையே தமது கட்சியின் குறிக்கோள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடல்நலக் குறைவுகாரணமாக தாம் கனடாவிற்கான பயணத்தை தவிர்த்ததாகவும் தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக அறிக்கை விடுத்ததாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் அவ்வாறு அறிக்கைகளை வெளியிடவில்லை என குறிப்பிட்ட வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன்,கட்சிகளைச் சேராத தாம் தேர்தல் காலத்தில் நடுநிலை வகித்தமை தவறில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து சிவிவிக்னேஸ்வரனை நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் எம்.ஏசுமந்திரன் கூறியிருந்த நிலையில், வடமாகாண முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்களுக்கான பதில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

Tuesday, November 17, 2015admin
asath

தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

அனைவரையும் அதிகபட்சமாக ஒரு வருடகால புனர்வாழ்விற்கு உட்படுத்தி விடுதலை செய்வதாக அரசாங்க தரப்பில் இருந்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கைதிகள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஒன்பது நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில்,நேற்று சிறைச்சாலைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரியிருந்தார்.

அத்துடன் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், புலம்பெயர்வாழ்ந்துவரும் தமிழர்கள் மற்றும் மக்களும் இணைந்து கைதிகளின் போராட்டத்தை கைதிகள் விடுதலையாகும் வரை எடுத்துச் செல்வதாகவும் அவர் உறுதி மொழி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதாக அரசாங்க தரப்பில் இருந்து வழங்கப்பட்ட உறுதிமொழியை கருத்தில் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக கைதிகள் அறிவித்துள்ளனர்.

ஏவ்வாறாயினும் அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாவிடின் மீண்டும் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கைதிகள் எச்சரித்துள்ளனர்.

இதுவரை 34 தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மழையால் 76,000 பேர் வரை இடம்பெயர்வு, பல வீடுகள் சேதம்

Monday, November 16, 2015admin
asath

யாழ் மாவட்டத்தில் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரம் வரை அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நிலையம் தெரிவித்துள்ளது.

21 ஆயிரத்து 437 குடும்பங்களைச் சேர்ந்த 76 ஆயிரத்து 673 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு, சொந்த வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், 118 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன் ஆயிரத்து 812 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ள நிலையில், வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் சொந்த வீடுகளுக்கு திரும்புவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிகமாக தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிவருகின்றது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 537 குடும்பங்களைச் சேர்ந்த 2028 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 12 நலன்புரி முகாம்களிலும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 3 நலன்புரி நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 348 குடும்பங்களைச் சேர்ந்த 1229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 840 குடும்பங்களைச் சேர்ந்த 2000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் 3200 குடும்பங்களைச் சேர்ந்த 11,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 2396 குடும்பங்களைச் சேர்ந்த 9046 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

தற்காலிக இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இனி கைதிகளுக்கு பிணை வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

Monday, November 16, 2015admin
asath

சிறைச்சாலைகளிலுள்ள எந்தவொரு தமிழ் கைதிகளுக்கும் பிணை வழங்கப்பட மாட்டாது என மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மெகசீன் சிறைச்சாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு கைதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஐந்து சிங்களவர்கள் உள்ளிட்ட 39 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், உயர்நீதிமன்றங்களில் வழக்கு உள்ள 124 கைதிகளில் 90 பேர் வரை தமக்கு புனர்வாழ்வளிக்குமாறு கடிதம் ஊடாக கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து சட்டமா அதிபர் தரப்பில் இருந்து சாதமான முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுதலை

Monday, November 16, 2015admin
asath

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படிருந்த மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவர்கள் அனைவரையும் 1 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் 31 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் அவர்களுக்கான பிணையாளிகள் இல்லாத காரணத்தால் மீண்டும் சிறையில் அடைக்கப்படிருந்தனர்.

எனும் பிணைக்கான ஆவணங்களை பதிவாளரிடம் சமர்ப்பித்த பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை சிங்களத் கைதியொருவரும் 24 தமிழ் அரசியல் கைதிகளும் சிறையில் இருந்து விடுதலையாகியிருந்தனர்.

சிவி விக்னேஸ்வரன் கைதிகளுடன் அவரச சந்திப்பு

Monday, November 16, 2015admin
asath

Wigneswaran met personersதம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் பார்வையிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் அரசியல் ரீதியான தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்காமல் போகும் சாத்தியம் உள்ளதாகவும்; கைதிகளிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

கைதிகளுக்கு எவ்விதத்தில் ஒத்துழைப்பு வழங்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் நாளை கூட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் இருந்து தீர்க்கமான முடிவொன்று இன்று கிடைக்கும் என ஏனையவர்களை போல தமக்கு எதிர்பார்ப்பு இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ஜனாதிபதி இதுவரை தீர்மானக்கமான முடிவொன்றை அறிவிக்காத நிலையில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து சரி விடுதலை செய்வது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டுவருவதாக சிவி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைதிகள் விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத்தியிருந்த அதேவேளை வெளிநாட்டு காரியலங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரி கடிதங்களை அனுப்பிவைத்ததாகவும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவன்கார்ட்டின் மற்றுமொரு இரகசியத்தை வௌியிட்டார் ராஜித

Sunday, November 15, 2015admin
asath

சர்ச்சைக்குரிய அவன்கார்ட் நிறுவனம் தொடர்பான மற்றுமொரு இரகசியத்தை அமைச்சரவை பிரதிப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன வெளியிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் மத்திய கொழும்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்திற்கும் அவன்கார்ட் நிறுவனத்திற்கு தொடர்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்காக அவன்கார்ட் நிறுவனம் பலகோடி ரூபாவை செலவுசெய்ததாக ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சி ஆதாரவாளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையும் அவர்களே மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் சிலர் அவர்களுக்கே ஆதரவுதெரிவித்துவருவதாகவும் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பன, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்தன ஆகியோர் அவன்கார்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக கடந்த காலங்களில் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.