மலையத்தில் தமிழர் பிரதேசங்களில் மண் சரிவு எச்சரிக்கை: மக்கள் வெளியேற்றம்

Monday, October 19, 2015admin
asath
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பதுளை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் நிலவுவதாக அணர்த்த முகாமைத்துவ அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அப்புத்தளை ஹல்தும்முல்லை பிரதேச செயலகத்திற்கு உட்பட தோட்டப் பிரிவுகளில் இருந்து 70 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி நிரோஷி ஜீவமாலா தெரிவித்துள்ளார். மண் சரிவு அபாயம் நிலவும் தோட்டங்களில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தற்காலிக கொட்டகைகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அதனை விரும்பாத குடும்பங்களுக்கு தோட்ட கம்பனிகளில் தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மண் சரிவு அபயம் நிலவும் ஐந்து தோட்ட பிரிவுகளில் இருந்து மக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு ஏற்றவாறு இடவசிதிகளை அமைத்துக் கொடுக்கும் பணிகளில் அணர்த்த முகாமைத்தவ அமைச்சு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை மண் சரி எச்சரிக்கையினால் தோட்டங்களில் இருந்து வெளியேறிய தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மாவட்ட செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொது மக்களும், பொது அமைப்புகளும் உதவியளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை கன்டி, கேகாலை போன்ற மாவட்டங்களிலும் மண்சரி ஏற்படலாம் என அணர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கூறியுள்ளது. கடந்த வருடம் கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 30ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததோடு, கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட இறம்பொடை, வெதமுல்லை பிரிவைச் சேர்ந்த கயிறுகட்டி (லில்லிஸ்லேண்ட்) தோட்டத்தில் கடந்த 25ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துமீறும் இந்திய மீனவர்களின் வலைகளை வெட்டியெறிய உத்தரவு?

Monday, October 19, 2015admin
asath
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் வலைகளை வெட்டியெறியுமாறு விரைவில் உத்தரவிடப்போவதாக மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து இலங்கையில் ஆங்கில அச்சு ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.   இதற்கென இலங்கை படையினரின் உதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   அத்துமீறி நுழையும் மீனவர்களை கைதுசெய்தல், படகுகளை கைப்பற்றுவது போன்ற நடவடிக்கைகளால் எவ்வித பலனும் ஏற்படப்போவது இல்லை எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   மேலும் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் எந்தவொரு படகையும் விடுவிக்கப்போவது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.   இதேவேளை இந்த பிரச்சினை குறித்து இரு நாடுகளினதும் மீனவர் அமைப்புகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காததை தொடர்ந்து மேலும் பேச்சுக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.   இதனடிப்படையில் இந்தித் தூதுவருக்கும் மீன்பிடித்துறை அமைச்சருக்கும்  இடையில் இவ்வாரம் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும். இதன் பின்னர் அமைச்சர் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் 120 நாட்களுக்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியபோதிலும் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு வெளியிட்டது பின்னர் 83 நாட்களுக்கு அனுமதி வழங்குமாறு இந்தியா மற்றுமொரு கோரிக்கையை முன்வைத்தது எனினும் அதற்கும் இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமர்தலிங்கம் படுகொலை ; ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்குமாறு பிரதமருக்கு கடிதம்

Monday, October 19, 2015admin
asath
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்தின் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியினால் இந்தக் கடிதம் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மூத்த தலைவர் அமர்தலிங்கம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இதுவே சிறந்த தருணம் என்று ஆனந்தசங்கரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்காவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களான நடராஜா ரவிராஜ், ரி.மகேஷ்வரன், ஜோசப் பரராஜசிங்கம் உள்ளிட்டோரின் படுகொலைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சர்வதேச நாடாளுமன்ற பேரவை அரசாங்கத்திடம் தெரிவித்திருப்பதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலை சம்பந்தப்பட்ட விசாரணைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ், ரி.மகேஸ்வரன், ரி.எம்.தசநாயக்கா ஆகியோரின் படுகொலைகள் சம்பந்தமான விபரங்களை தந்து உதவுமாறு சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் தங்களை  வேண்டியுள்ளதாக அறிகின்றேன். இதே காலத்தில் கௌரவ தங்கத்துரை, கிங்ஸ்லி ராஜநாயகம், லக்ஸ்மன் கதிர்காமர்  ஆகியோரின் படுகொலைகள் நடந்துள்ளன. தயவு செய்து இவர்களின் விபரங்களையும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கவும். தங்கதுரை அவர்களுடைய படுகொலை சம்பந்தமாக மக்கள் விசாரிக்க தொடங்கியுள்ளனர். அவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய காலத்தில் ஒரு பாடசாலை நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டவேளையில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் பலர் பலியானார்கள்.  அந்த நேரத்தில் இவரது படுகொலை சம்பந்தமாக கொழும்பில் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். அத்தோடு கிராமசேவையாளர் ஒருவர் உட்பட ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர் என்றும் ஏனைய இருவரை பொலிசார் தேடுகின்றனர் என்று செய்திகள் வெளியாயின. தங்கதுரை அவர்களுடைய விசாரணையோடு இணைத்து மற்றைய கிங்ஸ்லி ராஜநாயகம், லக்ஸ்மன் கதிகாமர் ஆகியோரின் படுகொலைகள் பற்றியும் ஒரே காலத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும். யுத்த காலத்தில் யுத்தப்பிரதேசத்துக்கு வெளியில் பயங்கரமான குற்றங்கள் நடந்துள்ளன. பயத்தின் காரணமாக சாட்சிகள் தயக்கம் காட்டியமையால் விசாரணைகள் தடைப்பட்டன. தற்போது நிலைமை பெருமளவு சீரடைந்துள்ளமையால் எனது அபிப்பிராயம் மூடி வைக்கப்பட்டிருந்த கோர்வைகள் கட்டவிழ்க்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கருதுகின்றேன். அத்துடன் எதிர்கட்சித் தலைவராக இருந்த கௌரவ.அ.அமிர்தலிங்கம் அவர்களின்  படுகொலையில் பலர் சம்பந்தப்பட்டுள்ளமையால் இது சம்பந்தமாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணைகள் நடத்துவதற்கு இதுவே பொருத்தமான நேரமாகையால் ஒரு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணையை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இறுதியாக இப் படுகொலைகளால் பெரும் அதிர்ச்சியிலிருந்து இன்றுவரை விடுபடாத உற்றார் உறவினர்களுக்கு இவ் விசாரணைகள் பெரும் மன ஆறுதலை கொடுக்கும் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.