கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம்..

Saturday, March 12, 2016admin
asath

இலங்கையில் முக்கிய துறைகளில் நிலையான பொருளாதார வளர்ச்சி‌யை நோக்காகக் கொண்ட ஒப்பந்தம் ஒன்று கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கனடாவின் வெளிவிவகாரங்களுக்கான உதவி பிரதி அமைச்சர் மற்றும் இலங்கையின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சின் பணிப்பாளர் ஆகியோர் இந்த வாரம் இந்த இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஜந்து வருடங்களுக்கான இந்த இணக்கப்பாட்டின் மூலம் இலங்கையில் பெண்கள் மற்றும் இளையவர்களுக்கு நெசவு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் மேலும் வலுவடையும் என இலங்கைக்கான கனடியத் துாதுவர் Shelley Whiting நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கனடா மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டுறவு குறித்து கனடாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிருக்கும் கனடிய பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.

இரு தரப்புப் பேச்சுக்களின்போது இலங்கையில் கனடாவின் முதலீடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.

மன்னார் ஆயர் பொறுப்புக்களை ஏற்றார் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை

Friday, January 15, 2016admin
asath

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக திருகோணமலை மறைமாவட்டத்தின் ஆயராக பொறுப்பு வகித்து இளைப்பாறிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்படும் வரை கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மறை மாவட்ட ஆயர் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இராஜினாமாவை திருத்தந்தை பிரான்ஸ்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை குறித்து ஆராயப்படும் – பிரதமர்

Friday, January 15, 2016admin
asath

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் அளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடபகுதியிலுள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் இராணுவத்திடம் உள்ள காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்

அத்துடன் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளாக காணப்படுவோருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் பிரதமர் உரையாற்றியிருந்ததுடன், இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மற்றும் பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளதாகவும் அந்த அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் உறுப்பினர்களை போல் அல்லாது வடக்கிலுள்ள இராணுவத்தினர் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாண்டின் நடுப்பகுதியில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புகூறல் செயற்பாடுகளுக்கு காலக்கெடு கிடையாது – அரசாங்கம்

Thursday, January 14, 2016admin
asath

பொறுப்புகூறல் செயற்பாடுகளை நிறைவுசெய்வதில் எந்தவொரு காலகெடுவும் இல்லை என இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

பொறுப்புகூறல் விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்

உள்ளகப் பொறிமுறையாகவே இந்த செயற்பாடுகள் அமையும் எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை செய்தது போன்று கலப்பு பொறிமுறையாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் தேவை ஏற்படின் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற்றுக்கொள்ளப்படும் என ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

இதனிடையே முன்னதாக எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு முன்னதாக ஏற்கனவே பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அமுல்படுத்தும் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டிருந்தது

கிழக்கு மாகாண சபை அமர்வில் பங்கேற்க பிள்ளையானுக்கு அனுமதி

Wednesday, January 13, 2016admin
asath

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு மாகாண சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைதான பிள்ளையான், மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாக வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கில் பிள்ளையான் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் மீராலெப்பை கலீல் ஆகியோரே நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பண்டிகை நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள் வைத்து அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

தேசிய பொங்கல் விழா வலயத்திலுள்ள முகாம்கள் அகற்றப்படுகின்றன

Wednesday, January 13, 2016admin

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளைய தினம் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏன்ன காரணத்திற்காக இவ்வாறு படைமுகாம்கள் தீடீரென அகற்றப்படுகின்றன என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெறுவதால் அதில் பங்கேற்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் ஆயிரத்து 500 க்கும் அதிகமான மக்கள் முற்பதிவு செய்துள்ளதுடன், அவர்களின் பெயர் விபரங்கள் அனுமதிக்காக இராணுவத்தினருக்கு அனுப்பட்டுள்ளன.

பொங்கல் விழாவில் பங்கேற்பதற்கென பதிவுசெய்தோர் நாளைய மறுதினம் வெள்ளிக்கிழமை வசாவிளான் பாடசாலையை அண்மித்த பாதுகாப்பு வலய எல்லையில் ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் கறுப்புகொடிப் போராட்டம் நடத்தப்பட்டுவருகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களின் நியாயமான விடயங்களை ஏற்றுக்கொள்கின்றோம் – ஜேவிபீ

Tuesday, January 12, 2016admin
asath

வட பகுதி தமிழ் மக்களின் நியாயமான விடயங்களை ஏற்றுக்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வட பகுதி மக்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் தொடர்ந்தும் இக்கட்டான நிலைமைகளை எதிர்நோக்கிவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் இரண்டாவது பிரஜையாக கருதப்படும் உளவியல் ரீதியான பிரச்சினையை தமிழர்கள் எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசியலமைப்பு மாற்றங்கள் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தாம் நம்பவில்லை என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு, அதிகாரமளிக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் நியாயமான விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் அரிதாகவே செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு ஜுலை கலவரக் காலப்பகுதியில் தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மக்கள் விடுதலை முன்னணி நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் நீதியரசர் சரத் டீ ஆப்ரூவிற்கு பிணை

Tuesday, January 12, 2016admin
asath

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் டி ஆப்ரூவிற்கு எதிராக குற்றமிழைத்தமை தொடர்பில் குற்றச்சாட்டை பதிவுசெய்த கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தனது வீட்டின் பணிப்பெண்ணை சரத் டீ ஆப்ரூ துஷ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அவரை குற்றமிழைத்ததை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்த உத்தியோகபூர்வமாக தீர்மானித்த கொழும்பு மேல் நீதிமன்றம், சரத் டீ ஆப்ரூவை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.

தமக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேற்கொண்ட தீர்மானம், சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி, சரத் டீ ஆப்றூ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்தது.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், உபாலி அபேரத்ன மற்றும்  பிரயந்த ஜயவர்த்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

நியாயமான விசாரணைகள் இன்றி சட்டமா அதிபரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு குறித்து இலங்கை கவனம் செலுத்தும் – மனோ

Monday, January 11, 2016admin
asath

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது இந்திய அரசியலமைப்பு குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என தேசிய ஒருங்கிணைப்பு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் ஏற்பாடுகள், வழிகாட்டல் விதிகளாக இலங்கை அரசியலமைப்பில் உள்வாங்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள முக்கியமான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அமைச்சர் மனோ கணேசன் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பல்வேறு செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் அவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளில் உதவி புரிவதில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் பங்காற்றுகின்றமை குறித்து அமைச்சர் பாராட்டியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பை பாராட்டியுள்ள மனோ கணேசன், இன மற்றும் மத ரீதியான சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கு விரிவான விதிகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் சடலங்களை தோண்டி சட்டவிரோத மண் அகழ்வு

Monday, January 11, 2016admin
asath

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்திலுள்ள பன்னங்கண்டி பொதுமயானப் பகுதியில் சடலங்கள் அகற்றப்பட்டு, சட்டவிரோத மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த விடயத்தை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் அவர்களும் பாராமுகமாக உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த சட்டவிரோத மக்கள் அகழ்வு நாளாந்தம் இடம்பெறுவதாக குறிப்பிட்ட அவர்கள், இது குறித்து பொலிஸார் அறிந்துள்ளதாகவும் பலர் இதில் தொடர்புபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சுpறிதரனிடம் மக்கள் முறையிட்டதை அடுத்து அவர் பிரதேசத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து, மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

sand-kilinochchi 03