‘தெறி’ விஜய்யின் 3 கெட்டப்: பின்னணி!!

Monday, April 4, 2016admin
asath

‘தெறி’ படத்தில் விஜய் மூன்று கெட்டப்களில் அசத்தியுளதாக, படத்தின் ஆடை வடிமைப்பாளர் மற்றும் ஸ்டைலிஸ்ட் கோமல் ஷஹானி கூறியுள்ளார்.

இதற்கு முன் விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள கோமல், அட்லீ இயக்கத்தில் உருவாகும் ‘தெறி’ படத்திலும் பணியாற்றியுள்ளார்.

படம் குறித்து மேலும் பேசிய கோமல், “விஜய் சார் எந்த மாதிரியான கெட்டப்புக்குள்ளும் எளிதாக பொருந்தமுடியும். அதை அவர் நேர்த்தியாக செய்வார். தெறி படத்தில் அவர் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார். அனைத்தையும் எளிதாகக் கையாண்டார். அதேசமயம் நான் விரும்பிய மாறுதல்களை செய்ய முழு சுதந்திரமும் தந்தார்.

விஜய் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் நான் ஒரு வடிவம் தந்துள்ளேன். எதையும் அவர் மாற்றச் சொல்லி கேட்கவில்லை ஏனென்றால் பெரும்பாலும் நான் தேர்ந்தெடுப்பவை அவருக்குப் பிடித்திருந்தது. புதிதாக ஒரு ட்ரெண்டை பரிசோதித்துப் பார்க்கவும் அவர் ஆவலாக இருந்தார். அவரது கூலிங்கிளாஸ் புது ட்ரெண்டை உருவாக்கும்.

அனைத்து கூலிங்கிளாஸுகளும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ரேபான், ஃபெராரி உள்ளிட்ட பிராண்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தியுள்ளோம். பல இடங்களுக்குப் பயணப்பட்டேன். லாஸ் ஏஞ்சல்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஷாப்பிங் செய்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் தேவையானவற்றைச் சேகரித்தேன்.

ராங்கு பாடலைத் தவிர மற்ற அனைத்துப் பாடல்களுக்கு விஜய்க்கான ஸ்டைலிங்கை நான் கவனித்தேன். படத்தில் விஜய் அணிந்த சட்டை மேலுறைகள் அனைத்தும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

டோல்சே கப்பானா, அர்மானி, ஜி ஸ்டார், டீஸல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்தியுள்ளோம். தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகர்களும் பேஷனில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.

நடிகர்கள் மட்டுமல்ல, இப்போது இயக்குநர்களும் தங்களது நடிகர்கள் திரையில் நன்றாக தெரிய வேண்டும் என நினைக்கின்றனர். அட்லீ ‘தெறி’ படத்தில் எனக்கு ஆதரவாக இருந்தார். புது விஷயங்களைப் பரிசோதிக்க தயாராக இருந்தார்”. இவ்வாறு கோமல் பேசியுள்ளார்.

விஜய், சமந்தா, ஏமி ஜாக்ஸன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகிறது.

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நயன்தாரா!!

Monday, April 4, 2016admin
asath

ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. மேலும், இப்படத்தின் இசை மே மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து 24AM ஸ்டுயோஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். மோகன் ராஜா இயக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேலும், சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் திரைப்பட விருது!!

Friday, April 1, 2016admin
asath

இந்திய சினிமாவில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் ஹென்றி லாங்லாயிஸ் திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பிரெஞ்சு திரைப்பட ஆவணக்காப்பாளர்களின் முன்னோடியான ஹென்றி லாங்லாயிஸ் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரீஸ் நகரில் ஹென்றி லாங்லாயிஸ் விருதைப் பெற்றேன். லாங்லாயிஸ் பற்றி என் குரு அனந்து சார் மூலம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விருது கிடைத்த செய்தியை கேட்க அவர் இருந்திருக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கின்னஸில் இடம்பெற்ற பாடகி சுசிலா!! இப்போதும் பாடத் தயார்!!

Friday, April 1, 2016admin
asath

இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன் என்று கின்னஸில் இடம்பிடித்த பாடகி பி.சுசிலா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் சுசீலா நாற்பதாண்டுகளாக பாடிவருகிறார்.

பத்மபூஷன்,தேசிய விருது, கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி பெங்கையா விருது, கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பி.சுசீலா பெற்றுள்ளார்.

திரைப்படத் துறையில் முன்னணிப் பாடகியாக திகழும் பி.சுசிலா 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதால் அதிக பாடல்களைப் பாடியவர் என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை புத்தக்கதில் இடம்பிடித்துள்ளார்.

இதைப் பகிரும் விதமாக  பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

கின்னஸ் சாதனை படைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். திரைப்படத்தில் பாடுவதற்கு முன் எச்.எம்.வி இசைத்தட்டில்தான் எனது பாடல்கள் இடம்பெற்றன. என் குரல் நன்றாக இருப்பதாக கூறி ஏவி. மெய்யப்ப செட்டியார்தான் என்னை திரைக்குக் கொண்டு வந்தார்.

அவரால்தான் எனக்கும் பேரும் புகழும் கிடைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ண தாசன், வாலி போன்ற பெரிய கலைஞர்களோடு பணியாற்றி யதை பெருமையாக கருதுகிறேன். எம்.எஸ்.வி இசையில் வெளியான ‘நாளை இந்த வேளை பார்த்து’ பாடலுக்குத்தான் எனக்கு முதல் முறையாக தேசிய விருது கிடைத் தது. இந்தப் பாடலை பதிவு செய்யும்போதே அதற்காக எனக்கு விருது கிடைக்கும் என்று எம்.எஸ்.வி கூறினார். அதேபோல கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது.

இயக்குநர் கே.எஸ். கோபால கிருஷ்ணன் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு எப்போதுமே நடிப்பில் பிரியம் இருந்ததில்லை. அந்த நாட்களில் இசையமைப்பாளரின் மெட்டுக்கு சரியாக பாடியதால்தான் எனக்கு பாராட்டுகள் குவிந்தன.

இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன்.

இவ்வாறு பி.சுசிலா பேசினார்.

63-வது தேசிய விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் ‘விசாரணை’, இளையராஜா, சமுத்திரக் கனிக்கு விருதுகள்!!

Thursday, March 31, 2016admin
asath

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விசாரணை’ படத்துக்காக சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்காக ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இளையராஜாவுக்கு விருது அளித்திருக்கிறார்கள்.

63-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது.

‘விசாரணை’ படத்துக்கு 3 விருதுகள்

இதில், ‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை’ சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் எடிட்டர் கிஷோருக்கு சிறந்த எடிட்டிங்கிற்கான விருது கிடைத்திருக்கிறது. சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை சமுத்திரக்கனி வென்றுள்ளார்.

சிறந்த பின்னணி இசைக்கான விருது ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் உருவான 1000வது படம் ‘தாரை தப்பட்டை’ என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி!!

Thursday, March 31, 2016admin
asath

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய் சேதுபதி.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘நானும் ரவுடிதான்’. விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். அனிருத் இசையமைத்த இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.

இப்படத்தின் இசைக்கும், கதைகளத்திற்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தற்போது மீண்டும் விக்னேஷ் சிவன் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து படம் பண்ணவிருக்கிறது. இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் துவங்கும் என தெரிகிறது. அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இப்படத்தின் கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். அப்பணிகளை முடித்துவிட்டு விஜய் சேதுபதியுடன் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற இருக்கிறது.

‘தெறி’ விழா பேச்சில் பிழை: தவறுக்கு வருந்திய விஜய்!!

Wednesday, March 23, 2016admin
asath

‘தெறி’ இசை வெளியீட்டு விழாவில் தனது பேச்சில் இடம்பெற்ற தவறான தகவலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார விஜய்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தெறி’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தன்னுடைய பேச்சுக்கு இடையே இரண்டு குட்டிக் கதைகளைச் சொன்னார். அதில் ரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை என்று ஒரு கதையைக் குறிப்பிட்டார். மாவோ சீன தேசத்து தலைவர்.

விஜய்யின் பேச்சைக் குறிப்பிட்டு இணையத்தில் பலரும் அவரைக் கலாய்த்து வந்தார்கள். விஜய்யின் பேச்சில் இருந்த தவறு குறித்து அவரது நெருங்கிய நபர்கள் விஜய்யிடம் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக விஜய் தரப்பில் இருந்து அளித்த விளக்கத்தில் “சுட்டிக்காட்டப்பட்ட தவறை விஜய் அறிந்தார். கதை சொல்லும்போது பெயரைத் தவறாக சொன்னதற்காக வருத்தப்பட்டார். தன் ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லும்போது, தெரியாமல் நடந்த தவறு அது. மேடையில் பேசும்போது அத்தகைய தவறுகள் வருவதுண்டு என்று அவர் கூறியதுடன், இனி கவனத்துடன் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

காதலும் கடந்து போகும் – காதலா அல்லது நட்பா!!

Friday, March 18, 2016admin
asath

“சூதுகவ்வும்” நலன் குமரசாமி இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம், மீண்டும் நலன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான படம், ‘பிரேமம்’ மலையாளப் படத்தில் செலினாக நடித்த மடோனா செபாஸ்டியன் தமிழில்அறிமுகமாகும் படம் என்ற இந்த காரணங்களே ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

படம் எப்படி? அடியாளாக இருக்கும் விஜய் சேதுபதி பார் உரிமையாளராக ஆசைப்படுகிறார். படிப்பு முடிந்த மடோனா ஐ.டி.யில் வேலை பார்க்க விரும்புகிறார். இவர்கள் இருவரின் நோக்கங்கள் நிறைவேறியதா? எப்படி சந்திக்கிறார்கள்? அவர்களுக்குள் உருவாகும் உறவு என்ன? இறுதியில் என்ன ஆகிறார்கள் என்பது மீதிக் கதை.

சினிமாவின் மூத்த தலைமுறையில் இருந்து தற்போதைய தலைமுறை வரை எந்த கூச்சமும் இல்லாமல் வேறு மொழி படத்தை காப்பி அடிப்பது, எடுத்தாள்வது, ரைட்ஸ் வாங்காமல் சுடுவது என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் சகஜமாகிவிட்டது.

இந்த சூழலில், ‘மை டியர் டெஸ்பரடோ’ என்னும் கொரியன் படத்தின் உரிமையை ரூ.40 லட்சத்துக்கு வாங்கி அதை தமிழ் சூழலுக்கேற்ப மறு ஆக்கம் செய்த இயக்குநர் நலன் குமரசாமியின் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால், நலன் சார் உங்களிடம் இருந்து ரசிகர்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள்…

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நானும் ரவுடிதான்’ படங்களில் நடித்த மாதிரி, காதலும் கடந்துபோகும் படத்திலும் அதே சிரிப்பு ரவுடி  கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். நடை, உடை, பாவனை, உடல் மொழி, ஃபெர்பாமன்ஸ் எல்லாவற்றிலும் விஜய் சேதுபதி சரியாகப் பொருந்துகிறார். படத்தை தன் நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார்.

மடோனா செபாஸ்டியனுக்கு ஸ்கோர் செய்ய நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அத்தனை வாய்ப்புகளையும் மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதியுடனான மோதல் – நட்பு படலத்தில் கவனிக்க வைக்கிறார்.

சமுத்திரக்கனி வழக்கம் போல வந்து போகிறார்.

விஜய் சேதுபதியின் அந்த இன்டர்வியூ போர்ஷன் அதகளம். நலன் குமரசாமியின் வசனங்கள் ரசிகர்களை கைதட்ட வைக்கிறது. சிரிக்க வைக்கிறது.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்துக்குப் பெரும் பலம். மோகன்ராஜன் வரிகளில் கககபோ பாடல் ரசிக்க வைக்கிறது. லியோ ஜான் பால் படத்தின் இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

நல்ல கதை, தரமான ஒளிப்பதிவு, கலக்கல் இசை என்று எல்லாமே வைத்துக்கொண்டு மேக்கிங்கில் அசத்திய நலன் குமரசாமி திரைக்கதையில் மட்டும் ஏன் எந்த சுவாரஸ்யமும், அழுத்தமும், பலமும் இல்லாமல் மேலோட்டமாக வடிவமைத்திருக்கிறார்? என்ற கேள்வி எழுகிறது.

மடோனா தன் பெற்றோரை கன்வின்ஸ் பண்ண முடியாமல் அடுத்தடுத்து பொய்களை அடுக்குவதும், நாடகம் ஆடுவதும் நம்பும் படி இல்லை. சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் பலவீனம்.

காதலும் கடந்து போகும் என்று தலைப்பு வைத்துவிட்டு காதலைப் பற்றி நெக்குருகி படம் எடுக்காமல் இயல்பாக எடுத்த விதத்தில் காதலா  அல்லது நட்பா  என்று குழப்பும் இந்த “காதலும் கடந்து போகும்”!!

விவசாயிக்கு உதவிக்கரம்: ட்வீட்டாளர்களை நெகிழவைத்த கருணாகரன்!!

Friday, March 18, 2016admin
asath

தஞ்சை விவசாயிக்கு சத்தமின்றி உதவிக்கரம் நீட்டிய நடிகர் கருணாகரனை ட்வீட்டர்வாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு படம் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு லட்ச ரூபாய் அளவில் விவசாயிகளுக்கு உதவுவேன் என்று சொன்னதைச் செய்து காட்டியதைக் குறிப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளனர்.

விவசாயி பாலனை டிராக்டரில் இருந்து இறக்கி போலீஸார் தாக்கிய வீடியோ பதிவு சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வந்தது. இதனை பலரும் கண்டித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மேலும், விஜய் மல்லையை மையப்படுத்தியும் இதில் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், விவசாயி பாலனின் கடனை அடைக்க அவருடைய வங்கிக் கணக்கில் 1 லட்சம் ரூபாயைச் செலுத்தி இருக்கிறார் நடிகர் கருணாகரன். அவருடைய இச்செயலுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

என்டிடிவி செய்தி இணையதளத்தில் விவசாயி பாலன் தாக்கப்பட்டது குறித்த செய்தியோடு அவருடைய வங்கிக் கணக்கு அடங்கிய விவரமும் செய்தியாளரால் ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனை ட்விட்டர் தளத்தில் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.

அந்த ட்வீட்டை கவனித்த நடிகர் கருணாகரன், தமிழக விவசாயி குறித்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்ததற்கு நன்றியும், அந்த வங்கிக் கணக்கில் தாம் ரூ.1 லட்சம் ஆன்லைனிலேயே செலுத்தியதையும் பதில் ட்வீட்டாக பதிந்தார். கருணாகரனின் இந்த அணுகுமுறை ட்வீட்டாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

இதனிடையே, விவசாயி பாலனுக்கு நடிகர் விஷாலும் உரிய உதவிகளை செய்வதற்கான நடவடிக்கையில் முழுவீச்சில் இறங்கியதும் கவனிக்கத்தக்கது.

“காதலும் கடந்து போகும்” 3 நாட்களில் ரூ.8 கோடி வசூல்

Friday, March 18, 2016admin
asath

விஜய் சேதுபதி படங்களில் முதல் 3 நாட்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது ‘காதலும் கடந்து போகும்’

நலன் குமரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை அபி & அபி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘காதலும் கடந்து போகும்’ படத்துக்கு விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெளியான முதல் 3 நாட்களில் ரூ.8.1 கோடி வசூல் செய்திருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்களில் முதல் 3 நாட்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்திருக்கிறது இப்படம். அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் சுமார் 60 லட்ச ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு இப்படத்துக்கு வரிச்சலுகை அளித்திருக்கும் நேரத்தில் படமும் நல்ல வசூல் செய்து வருவதால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.