இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்: கனடா பிரதமர் கடும் கண்டனம்!!

Monday, April 4, 2016admin
asath

கனடாவில் இந்திய சீக்கியர் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் இனவெறியுடன் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடும் கண்டனம் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் சுப்னீந்தர் சிங் கேஹ்ரா (29). தற்போது இவர் கனடாவின் டோராண்டோ அருகே புறநகர் பகுதியான பிராம்ப்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அண்மையில் தனது நண்பர்களுடன் வெளியே சென்ற சுப்னீந்தர் சிங் அன்றிரவு குயிபெக் நகரில் இருந்து தனது வீட்டுக்கு செல்ல டாக்ஸிக்காக காத்திருந்தார். அப்போது ஒரு காரில் குடிபோதையுடன் தள்ளாடியபடி வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சுப்னீந்தர் சிங்கின் தலைப் பாகையை சுட்டி காண்பித்து இனவெறியுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

ஒரு கட்டத்தில் அந்த நான்கு பேரும் சுப்னீந்தர் சிங்கை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சுப்னீந்தர் சிங்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து அவர் கூறும்போது, ‘‘முதலில் எனது கண்களை நோக்கி அந்த கும்பலில் இருந்த ஒருவன் குத்துவிட்டான். அதில் வலி தாங்க முடியாமல் நான் கீழே விழுந்ததும், மற்றவர்கள் என்னை காலால் எட்டி உதைத்தனர். நிறம், இனம் மற்றும் நான் அணிந்திருந்த தலைப்பாகை ஆகியவற்றால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்றார்.

அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இந்தியர் மீதான இந்த இனவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனவெறிக்கு கனடாவில் மக்கள் இடம் அளிக்கக் கூடாது என்றும் இத்தகைய செயல்களுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மற்றொருவர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

நவீனமயமாகும் பயங்கரவாதம்… அமெரிக்காவில் மோடி கவலை!!

Friday, April 1, 2016admin
asath

பயங்கரவாதம் அதிதொழில்நுட்பங்களுடன் நவீனமயமாகி வரும் நிலையில் அதனை எதிர்த்து முறியடிப்பதில் சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் பழமையாக உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். அமெரிக்காவில் நடைபெறும் அணுப்பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது: பயங்கரவாதம் வளர்ந்து விட்டது. பயங்கரவாதிகள் 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு எதிரான நமது நடவடிக்கைகளிலோ புதுமை எதுவும் இல்லை, பழைய முறைகளைச் சார்ந்திருக்கிறது. சமீபத்தில் பிரஸல்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல் இதற்கு உதாரணம் என்பதோடு, பயங்கரவாத அச்சுறுத்தல் காலக்கட்டத்தில் அணுப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியமான விவகாரம் எவ்வளவு தேவையானது, எத்தனை அவசரமானது என்பதை உணர்த்துகிறது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா உலகப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சேவை புரிந்துள்ளார். முதலில் நடப்பு பயங்கரவாதம், தீவிர வன்முறையை ஒரு நாடகீயக் காட்சியாக அரங்கேற்றுகிறது. இரண்டாவதாக நாம் இதற்குக் காரணமானவரை குகையில் தேட முடியாது, நகரத்தில் ஸ்மார்ட் போன், கணினி ஆகியவற்றுடன் இருக்கும் பயங்கரவாதியை நாம் தேடுகிறோம். மேலும் அணு ஆயுதக் கடத்தல்வாதிகளுடன் நாட்டின் முகவர்கள், பயங்கரவாதிகள் ஆகியோரின் இணைவு மிகப்பெரிய அச்சுறுத்தல். பயங்கரவாதம் உலக அளவில் வலைப்பின்னலாக உருவெடுத்துள்ள போது, நாம் தேச எல்லைகளுக்குட்பட்டு அதனை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பயங்கரவாதத்தின் எல்லையும், அதற்கு ஆயுத, பொருளுதவி வழங்கும் வலைப்பின்னல்களும் உலகளாவிய பரிமாணத்தை எட்டிய அதே வேளையில் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அந்த பரிமாணங்களை எட்டவில்லை. பயங்கரவாதம் என்பது வேறு ஏதோ ஒருவருடைய பிரச்சினை, அவர்களது பயங்கரவாதி, என் பயங்கரவாதி அல்ல போன்ற அணுகுமுறைகளையும், சிந்தனைப்போக்குகளையும் அறவே ஒழித்துக் கட்ட வேண்டும். அணுப்பாதுகாப்பு என்பது அனைத்து நாடுகளின், பெரிய அரசுகளின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அனைத்து நாடுகளும் தங்களது சர்வதேசப் பொறுப்புகளுக்கு கடமைப்பட்டவர்களாக இருப்பது அவசியம். இவ்வாறு கூறினார் மோடி.

கொல்கத்தாவில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலம் இடிந்து விழுந்தது!!

Thursday, March 31, 2016admin
asath

கொல்கத்தாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்து 18 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

மதியம் 12.30 மணியளவில் புரா பஜார் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பாலத்தின் கீழே கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. பாதசாரிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

பாலத்தின் கீழே ஏராளமான கடைகள் இருந்தன. அந்த கடைகளும் அப்பளமாக நொறுங்கின. போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த 5 போலீஸாரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் பல டன் எடையுள்ள இரும்பு தூண்கள் சரிந்து விழுந்திருப்பதால் அவற்றை தீயணைப்பு படையினரால் அகற்ற முடியவில்லை.

உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. அதன்படி ராணுவத்தின் இன்ஜினீயரிங் பிரிவைச் சேர்ந்த 500 வீரர்கள் ராட்சத கிரேன் மற்றும் அதிநவீன கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் சம்பவ பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

மல்லையாவை பிடியுங்கள் பிறகு எங்களிடம் அபராதம் கேளுங்கள்!!

Wednesday, March 23, 2016admin
asath

தெற்கு மும்பையின் புலேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்லதா பன்சாலி. இரு குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை, மகாலஷ்மி ரயில் நிலையத்தில் இருந்து இறங்கிய

போது டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்டுள்ளார். அப் போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததை ஒப்புக் கொண்ட பன்சாலி, இதற்காக ரூ.260 அபராதம் செலுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித் துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிக்கெட் பரிசோதகர் அங்கிருந்த ரயில்வே போலீஸார் மூலம் அவரை கைது செய்ய முயன்றார்.

இதனால் ஆவேசமடைந்த பன்சாலி, ‘‘வங்கி கடன் ரூ.9,000 கோடியை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள். அதன் பிறகு என்னை கைது செய்யுங்கள்’’ என தெரிவித்தார்.

இதனால் ரயில்வே போலீஸார், அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்த ரயில்வே பெண் போலீஸ் அவருக்காக அபராத தொகை செலுத்தவும் முன் வந்தார். எனினும் அதை ஏற்காத பன்சாலி சுமார் 12 மணி நேரம் வரை ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தார்.

‘சாமான்ய மக்களை துன் புறுத்துவதை விட்டு விட்டு, மல்லையா போன்றவர்களை கைது செய்யுங்கள். எதற்காக அவர்களிடம் மட்டும் மென்மை யான போக்கை கடைபிடிக்கிறீர் கள்’ என தொடர்ந்து கேள்வி எழுப்பி யுள்ளார்.

இதனால் திகைத்த அதிகாரி கள் பன்சாலியின் கணவரை வர வழைத்தனர். ஆனால் அவரையும் அபராதம் செலுத்த விடாமல் பன்சாலி நீதிமன்றத்துக்கு சென்று தனது தவறை ஒப்புக் கொண்டார். அத்துடன் அபராதத் துக்கு பதில் 7 நாட்கள் சிறை வாசத்தையும் தேர்ந்தெடுத்தார்.

தேசிய கீதம் விவகாரம்: அமிதாபுக்கு எதிராக போலீஸில் புகார்!!

Monday, March 21, 2016admin
asath

தேசிய கீதம் பாடுவதற்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை தாண்டி அமிதாப் பச்சன் நீண்ட நேரம் பாடியதாகவும் வார்த்தையை தவறாக உச்சரித்ததாகவும் டெல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19-ம் தேதி கொல்கத்தாவில் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இதன் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் பாகிஸ்தான் தேசிய கீதத்தை அந்த நாட்டு பாடகர் ஷாபகத் அமானத் அலியும் பாடினர்.

இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு எதிராக கிழக்கு டெல்லியில் உள்ள புது அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் குறும்பட இயக்குநர் உல்லாஸ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது: தேசிய கீதத்தை 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். ஆனால் அமிதாப் பச்சன் ஒரு நிமிடம் 10 விநாடிகள் எடுத்துக் கொண்டார். மேலும் சிந்து என்ற வார்த்தையை அவர் தவறாக உச்சரித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 2-ல் ஆஜராக மல்லையாவுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்..

Friday, March 18, 2016admin
asath

ஐடிபிஐ வங்கியிடம் பண மோசடி செய்ததாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது வெளிநாட்டில் உள்ளார்.

முன்னதாக, அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையா இன்று (மார்ச் 18) நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், ஏப்ரல் வரை கால அவகாசம் வேண்டும் என்று விஜய் மல்லையா கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஐடிபிஐ வங்கியிடம் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராகும்படி மல்லையாவுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

விஜய் மல்லையா மீது நடவடிக்கை: அருண் ஜேட்லி உறுதி!!

Thursday, March 10, 2016admin
asath

விஜய் மல்லையா விவகாரத்தால் எழுந்த விவாதத்துக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ‘சாத்தியமாகக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.

அவர் மேலும் கேள்வி நேரத்தின்போது கூறும்போது, நவம்பர் 2015 வரை மல்லையா வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை ரூ.9,000 கோடி என்றார்.

முன்னதாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், அரசும், பாரத ஸ்டேட் வங்கியும் ஏன் உரிய நேரத்தில் விரைவாகச் செயலாற்றி அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் செய்யவில்லை என்றும் அவர் கேட்டார்.

கார்கே கேள்விகள் அனைத்து உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்ளும் கேள்விகளே என்ற ஜேட்லி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் மல்லையாவுக்கு வங்கிக் கடன்கள் அளிக்கப்பட்டது என்றார்.

“அதாவது கணக்கு விவரங்களின் படி, செப்டம்பர் 2004-ல் வங்கிகள் கூட்டமைப்பு முதல் கடன் தொகையை வழங்கியுள்ளது. இந்தத் தேதியே அனைத்தையும் தெளிவுபடுத்துகிறது” என்றார்.

மல்லையா தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டது எப்படி என்று ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு சூசகமாக பதில் அளித்த ஜேட்லி, குவாட்ரோச்சி தப்பிச் சென்றதை நினைவூட்டினார்.

காங்கிரஸ் சரமாரி கேள்வி:

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியபோது, “ரொட்டி திருடினால் அவரை அடித்து உதைத்து சிறையில் தள்ளுகிறோம். ஒரு பெரிய தொழிலதிபர் ரூ.9,000 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியுள்ளார், அவர் முதல் வகுப்பில் தப்பிச் செல்ல நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?” என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, #BJPhelpedMallyaFlee என்ற ஹேஷ்டேக் மூலம் மல்லையா நாட்டை விட்டுத் தப்பி ஓடுவதற்கு பாஜக துணைபுரிந்ததாக பதிவுகளைக் கொட்டி வருகிறது.

சிபிஐ எச்சரிக்கை விடுத்தபோதும், மல்லையாவின் பாஸ்போர்ட்டை பாஜக அரசு ஏன் முடக்கவில்லை என்று அந்தக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடனுக்கான தவணை செலுத்தத் தவறிய விவசாயியை, போலீஸார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவத்தை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ், மிகப் பெரிய தொழிலதிபரை தப்ப விடுவது நியாயமா என்று கேள்வி எழுப்பி, அதில் மல்லையாவின் படத்தையும் பகிர்ந்துள்ளது.

வெளிநாடு தப்பிய மல்லையா:

முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியேறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்தி தெரிவித்தார்.

இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவுக்கு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

அவர் நாட்டை விட்டு ஏற்கெனவே வெளியேறி இருந்தால் லண்டனில் உள்ள தூதரகத்தின் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம், அவரது மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் இணையதள முகவரிக்கு அனுப்ப அல்லது கடன் மீட்பு தீர்ப்பாயம் மூலம் அனுப்பவும் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அண்மையில் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கி அவரை கைது செய்ய வேண்டும் என்று எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் விஜய் மல்லையாவிற்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறியது. இதைத் தொடர்ந்து தான் பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஐஆர்என்எஸ்எஸ்-1எப்!!

Thursday, March 10, 2016admin
asath

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. கடல் ஆராய்ச்சிக்கு பிரத்யேகமாக 7 செயற்கைக்கோள்களை ஏவுவதற்குத் திட்டமிட்டு, இதுவரை 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இது 6-வது செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைச் சீற்றம் கண்டறிதல், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார்ந்த ஆய்வுகளுக்கு இந்த செயற்கைக் கோள் மிகவும் உதவிகரமாக அமையும்.

இந்தச் செயற்கைக் கோள் சிறப்பாகச் செயல்பட்டு தகவல்களை அனுப்பத் தொடங்கும் போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஜிபிஎஸ் வசதி கொண்ட நாடு என்ற பெருமையை எட்டும்.

இந்தச் செயற்கைக்கோள் செலுத்தலில் பங்காற்றிய திட்ட இயக்குநர் ஜெயக்குமார் கூறும்போது, “அனைவரது பங்களிப்புக்கும் நன்றிகள். வாழ்த்துக்கள். இந்த செயற்கைக் கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்” என்றார்.

பிரதமர் மோடியும் விஞ்ஞானிகளின் இந்த வெற்றியைப் பாராட்டியுள்ளார்.

ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா: தோனி, கோலி, தவான் அதிரடி!!

Sunday, March 6, 2016admin
asath

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே தாகாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. மழையால் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை விரட்ட களமிறங்கிய இந்திய அணி, 2-வது ஓவரிலேயே ரோஹித் சர்மாவை (1 ரன்) இழந்தது. அடுத்த சில ஓவர்கள் நிதானித்த கோலி – தவான் இணை 5-வது ஓவரிலிருந்து அதிரடி ஆட்டத்தைத் துவங்கியது.

5-வது ஓவரில் 3 பவுண்டரி உட்பட 14 ரன்களும், 6-வது ஓவரில் 15 ரன்களும் சேர்ந்தன. அதே நேரத்தில் ஷகிப் உல் ஹசன், மறுபக்கம் நசிர் உசைன், மொர்டாஸா, டஸ்கின் அகமது ஆகியோர் ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தினர். 10 ஓவர்களில் சரியாக 71 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணிக்கு, அடுத்த 5 ஓவரகளில் 50 ரன்கள் தேவையாயிருந்தது. அடுத்த 2 ஓவர்களில் தவான் 3 பவுண்டரிகளையும், கோலி 2 பவுண்டரிகளையும் விளாச, 26 ரன்கள் சேர்ந்தது. தவான் 35 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

அந்த கட்டத்தில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்களை கொடுத்திருந்த டஸ்கின் அகமது மீண்டும் பந்துவீச வந்தார். அவரது முதல் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே வர 4-வது பந்தில் தவான் ஆட்டமிழந்தார் (60 ரன்கள், 44 பந்துகள்).

2 ஓவர்களில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி களமிறங்கினார். 14-வது ஓவரை அல் அமின் உசைன் வீச, முதல் பந்து, தோனியின் வழக்கமான விளாசலில் சிக்ஸருக்கு பறந்தது. அடுத்த பந்தில் ஒரு ரன் வர, 3-வது பந்தை சந்தித்த கோலி 3 ரன்கள் எடுத்தார். 4-வது பந்தை பவுண்டரிக்கு விளாசிய தோனி , 5-வது பந்தை மீண்டும் சிக்ஸருக்கு விளாச இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆசியக் கோப்பையை வென்றது. தோனி 6 பந்துகளில் 20 ரன்களும், கோலி 28 பந்துகளில் 41 ரன்களும் எடுத்திருந்தனர்.

ஆசிய கோப்பையை இந்தியா வெல்வது இது 6-வது முறையாகும்.

160 விமான தளங்களை மறு பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்!!

Thursday, March 3, 2016admin
asath

நாட்டில் விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதற்காக, பயன்பாட்டில் இல்லாத மற்றும் முழுவதுமாக பயன்படுத்தப்படாத 160 விமான தளங்கள் மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜேட்லி மேலும் கூறும்போது, “இந்த 160 விமான தளங்கள் (airports and air strips) மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ரூ. 50 கோடி முதல் ரூ.100 கோடி வரை செலவில் மறு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும். இதுபோல் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) கட்டுப்பாட்டில் உள்ள 25 பயன்படுத்தப்படாத விமான தளங்களில்10 தளங்கள் மீண்டும் பயன்பாடுக்கு கொண்டுவரப்படும். அடுத்த நிதியாண்டு முதல், நாட்டின் அனைத்து முக்கிய துறைமுகங்கள், விமான நிலையங்களிலும் சுங்க வரிவிதிப்பில் ஒற்றை சாளர முறை கொண்டுவரப்படும்” என்றார்.