இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்: கனடா பிரதமர் கடும் கண்டனம்!!

Monday, April 4, 2016admin
asath

கனடாவில் இந்திய சீக்கியர் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் இனவெறியுடன் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடும் கண்டனம் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் சுப்னீந்தர் சிங் கேஹ்ரா (29). தற்போது இவர் கனடாவின் டோராண்டோ அருகே புறநகர் பகுதியான பிராம்ப்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அண்மையில் தனது நண்பர்களுடன் வெளியே சென்ற சுப்னீந்தர் சிங் அன்றிரவு குயிபெக் நகரில் இருந்து தனது வீட்டுக்கு செல்ல டாக்ஸிக்காக காத்திருந்தார். அப்போது ஒரு காரில் குடிபோதையுடன் தள்ளாடியபடி வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சுப்னீந்தர் சிங்கின் தலைப் பாகையை சுட்டி காண்பித்து இனவெறியுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

ஒரு கட்டத்தில் அந்த நான்கு பேரும் சுப்னீந்தர் சிங்கை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சுப்னீந்தர் சிங்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து அவர் கூறும்போது, ‘‘முதலில் எனது கண்களை நோக்கி அந்த கும்பலில் இருந்த ஒருவன் குத்துவிட்டான். அதில் வலி தாங்க முடியாமல் நான் கீழே விழுந்ததும், மற்றவர்கள் என்னை காலால் எட்டி உதைத்தனர். நிறம், இனம் மற்றும் நான் அணிந்திருந்த தலைப்பாகை ஆகியவற்றால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்றார்.

அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இந்தியர் மீதான இந்த இனவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனவெறிக்கு கனடாவில் மக்கள் இடம் அளிக்கக் கூடாது என்றும் இத்தகைய செயல்களுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மற்றொருவர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் கசிவு: சர்வதேச பெரும்புள்ளிகளின் பணப் பதுக்கல்கள்!!

Monday, April 4, 2016admin
asath

உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுதான் ‘பனாமா பேப்பர்ஸ்’. விக்கிலீக்ஸ் மாதிரி இதுவும் ஒரு தகவல் கசிவு விவரம்.

பன்னாட்டு ஊடகங்கள் பலவற்றின் இன்வெஸ்டிகேவ் ஜர்னலிஸம் (புலனாய்வு இதழியல்) இந்த தகவல் கசிவின் பின்னணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளது.

புதின், மெஸ்ஸி.. இன்னும் பலர்

இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இடம்பெற்றிருக்கின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாக்கியிருக்கிறது. இந்த 140 அரசியல் பிரபலங்களில் 12 பேர் இன்னாள், முன்னாள் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து..

இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஸ்விஸ் வங்கிக்கும் பனாமா வங்கிக்கும் என்ன வித்தியாசம்?

ஸ்விஸ் வங்கிகளில் தனி நபர்கள் தங்கள் பெயரிலேயே வங்கி கணக்கு ஆரம்பிக்க முடியும். ஆனால் பனாமா வங்கியில் அது சாத்தியமில்லை. பனாமா வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமானால் அந்நாட்டில் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்க வேண்டும். அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அவ்வாறாக தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பணத்தை சேமிக்கலாம். இதற்கு பெயர்தான் ஷெல் கம்பெனி (Shell Company).

தகவல் பெறப்பட்டது எப்படி?

வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் பணம் முதலீடு செய்பவர்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் உச்சபட்ச ரகசியமாக பேணும் நிலையில் பிரபலங்கள் பலரை இப்படி அம்பலப்படுத்தும் வகையில் தகவல் எப்படி கசிந்தது என்பது சுவாரஸ்யமானது.

இது குறித்து முனிச் நகரில் இருந்து செயல்படும் சுடட்சே ஜெய்துங் (Sueddeutsche Zeitung) என்ற நாளிதழின் நிருபர் பாஸ்டியன் ஓபர்மேயர் கூறும்போது, “அடையாளத்தை வெளியிடாத உள்வட்டாரம் ஒன்று எங்களுக்கு இத்தகவலை வழங்கியது. அவர்கள் இதற்காக பண பலன் ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தங்கள் அடையாளம் எவ்விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதை மட்டும் வலியுறுத்தினர்” என்றார்.

பனாமா அதிபர் உறுதி

பனாமா பேப்பர்ஸ் தகவல் கசிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், பனாமா நாட்டு அதிபர் ஜூவான் கார்லஸ் வெரெலா விடுத்துள்ள அறிக்கையில், “பனாமா நிதித் துறையில் எவ்வித முறைகேட்டுக்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் தொடர்பாக முழுமையான நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

நவீனமயமாகும் பயங்கரவாதம்… அமெரிக்காவில் மோடி கவலை!!

Friday, April 1, 2016admin
asath

பயங்கரவாதம் அதிதொழில்நுட்பங்களுடன் நவீனமயமாகி வரும் நிலையில் அதனை எதிர்த்து முறியடிப்பதில் சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் பழமையாக உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். அமெரிக்காவில் நடைபெறும் அணுப்பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது: பயங்கரவாதம் வளர்ந்து விட்டது. பயங்கரவாதிகள் 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு எதிரான நமது நடவடிக்கைகளிலோ புதுமை எதுவும் இல்லை, பழைய முறைகளைச் சார்ந்திருக்கிறது. சமீபத்தில் பிரஸல்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல் இதற்கு உதாரணம் என்பதோடு, பயங்கரவாத அச்சுறுத்தல் காலக்கட்டத்தில் அணுப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியமான விவகாரம் எவ்வளவு தேவையானது, எத்தனை அவசரமானது என்பதை உணர்த்துகிறது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா உலகப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சேவை புரிந்துள்ளார். முதலில் நடப்பு பயங்கரவாதம், தீவிர வன்முறையை ஒரு நாடகீயக் காட்சியாக அரங்கேற்றுகிறது. இரண்டாவதாக நாம் இதற்குக் காரணமானவரை குகையில் தேட முடியாது, நகரத்தில் ஸ்மார்ட் போன், கணினி ஆகியவற்றுடன் இருக்கும் பயங்கரவாதியை நாம் தேடுகிறோம். மேலும் அணு ஆயுதக் கடத்தல்வாதிகளுடன் நாட்டின் முகவர்கள், பயங்கரவாதிகள் ஆகியோரின் இணைவு மிகப்பெரிய அச்சுறுத்தல். பயங்கரவாதம் உலக அளவில் வலைப்பின்னலாக உருவெடுத்துள்ள போது, நாம் தேச எல்லைகளுக்குட்பட்டு அதனை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பயங்கரவாதத்தின் எல்லையும், அதற்கு ஆயுத, பொருளுதவி வழங்கும் வலைப்பின்னல்களும் உலகளாவிய பரிமாணத்தை எட்டிய அதே வேளையில் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அந்த பரிமாணங்களை எட்டவில்லை. பயங்கரவாதம் என்பது வேறு ஏதோ ஒருவருடைய பிரச்சினை, அவர்களது பயங்கரவாதி, என் பயங்கரவாதி அல்ல போன்ற அணுகுமுறைகளையும், சிந்தனைப்போக்குகளையும் அறவே ஒழித்துக் கட்ட வேண்டும். அணுப்பாதுகாப்பு என்பது அனைத்து நாடுகளின், பெரிய அரசுகளின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அனைத்து நாடுகளும் தங்களது சர்வதேசப் பொறுப்புகளுக்கு கடமைப்பட்டவர்களாக இருப்பது அவசியம். இவ்வாறு கூறினார் மோடி.

கால்கள் இல்லாமல், 16 வருடங்களாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்!!

Friday, April 1, 2016admin
asath

சீனாவின் சோங்க்விங் மாகாணத்தில் வாடியன் கிராமத்தில் வசிக்கிறார் 37 வயது லி ஜுஹாங். இரண்டு கால்களையும் விபத்தில் இழந்த லி, 16 வருடங்களாக மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். 4 வயதில் ஒரு ட்ரக் கால்களில் ஏறியதில், இரண்டு கால் களையும் இழந்துவிட்டார் லி. உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாகி விட்டது. 4 ஆண்டுகள் அமைதியாக முடங்கிக் கிடந்தவர், 8 வயதில் நகர முயற்சி செய்தார். இரண்டு கைகளுக்கும் இரண்டு நாற்காலி களை வைத்துக்கொண்டு, நகர ஆரம்பித்தார். நகர முடியாதபோது நாற்காலிகளில் அமர்ந்துகொள்வார். பள்ளி செல்ல ஆரம்பித்தவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. சிறப்பாகப் படித்து, மருத்துவப் பட்டமும் பெற்றார் லி.

தனது கிராமத்திலேயே ஒரு க்ளினிக் ஆரம்பித்து, மருத்துவம் பார்த்து வருகிறார். லியின் குணத்தைப் புரிந்துகொண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த லியு ஸிங்கியான், அவரைத் திருமணம் செய்துகொண்டார். ‘’என் கணவர் எனக்குக் கால்கள் இல்லாத குறையே தெரியாதவாறு கவனித்துக்கொள்கிறார். அருகில் உள்ள கிராமங்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் என்னை அழைத்துக்கொண்டு செல்வார். இதுவரை 6 ஆயிரம் பேருக்கு மருத்துவம் செய்திருக்கிறேன். எனக்குக் கால்கள் இல்லாவிட்டாலும் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்ற முடிகிறது என்ற நிறைவே போதுமானது’’ என்கிறார் லி. கடந்த 15 ஆண்டுகளில் 24 நாற்காலிகளை நடப்பதற்குப் பயன்படுத்தியிருக்கிறார் லி. இவரது 12 வயது மகன், தன் அம்மாவைப் போலவே மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறான்.

தன்னம்பிக்கை என்பதை ’லி’ என்றும் அழைக்கலாம்!

மலேசியாவில் உள்ள டெஸ்கோ ஹைபர்மார்க்கெட்டில் ஒருவர் பொருட்களைத்

எகிப்து விமானத்தில் கடத்தல் காரருடன் புகைப்படம் !!

Thursday, March 31, 2016admin
asath

சமீபத்தில் கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில், பணயக்கைதியாக இருந்த பிரிட்டைனைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று பிரபலமாகி வருகிறது. அதன் காரணம், அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது, விமானத்தைக் கடத்தியவருடன்.

சில நாட்களுக்கு முன்பு ஈஜிப்ட்ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடத்தப்பட்டு சைப்ரஸில் தரையிறக்கப்பட்டது. ஆனால் இதில் தீவிரவாதிகள் யாரும் சம்பந்தப்படவில்லை. முஸ்தஃபா என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரே இதற்குக் காரணம். அவரும் கைதுசெய்யப்பட்டார்.

இந்தக் கடத்தல் சம்பவத்தின்போது, பணயக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்த, பிரிட்டைனைச் சேர்ந்த பெஞ்சமின் இன்னெஸ் என்பவர், முஸ்தஃபாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இது பற்றி பேசிய பெஞ்சமின், “அவர் ஏன் விமானத்தைக் கடத்தினார் எனத் தெரியவில்லை. நான் ஜாக்கிரதையாக இருந்தேன், ஆனால் அந்த நிலையில் சிறிது உற்சாகமாகவும் இருக்க நினைத்தேன். அவர் வயிற்றில் கட்டியிருந்த வெடிகுண்டு நிஜமாக இருக்கும் பட்சத்தில் நான் இழக்க எதுவுமில்லை. அந்த மனநிலையில் தான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். வெடிகுண்டு என்று அவர் கட்டியிருந்த உடையை அருகில் சென்றும் பார்த்தேன்” என்றார்.

58 வயதான முஸ்தஃபா தற்போது 8 நாட்களில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனது முன்னாள் மனைவியையும், குழந்தைகளையும் பார்க்கவே விமானத்தை கடத்தி திசை திருப்பி தரையிறங்கச் சொன்னதாக முஸ்தஃபா போலீஸில் தெரிவித்தார்.

முஸ்தஃப்பாவை மனநலம பாதிக்கப்பட்டவர் எனக் கூறும் அதிகாரிகள், அவர் மீது விமானக் கடத்தல், பொறுப்பற்ற – அச்சுறுத்தும் நடத்தை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சைப்ரஸில் இருக்கும் முஸ்தஃபாவை ஒப்படைக்குமாறு எகிப்து அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. முஸ்தஃபா இதற்கு முன்பே குற்றச் செயல்கள் புரிந்து ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலம் இடிந்து விழுந்தது!!

Thursday, March 31, 2016admin
asath

கொல்கத்தாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்து 18 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

மதியம் 12.30 மணியளவில் புரா பஜார் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பாலத்தின் கீழே கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. பாதசாரிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

பாலத்தின் கீழே ஏராளமான கடைகள் இருந்தன. அந்த கடைகளும் அப்பளமாக நொறுங்கின. போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த 5 போலீஸாரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் பல டன் எடையுள்ள இரும்பு தூண்கள் சரிந்து விழுந்திருப்பதால் அவற்றை தீயணைப்பு படையினரால் அகற்ற முடியவில்லை.

உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. அதன்படி ராணுவத்தின் இன்ஜினீயரிங் பிரிவைச் சேர்ந்த 500 வீரர்கள் ராட்சத கிரேன் மற்றும் அதிநவீன கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் சம்பவ பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

நீண்டகாலப் பொதுப் போக்குவரத்துக் குறித்து ஆராயும் ரொறன்ரோ நகரசபையின்..

Thursday, March 31, 2016admin
asath

நீண்டகாலப் பொதுப் போக்குவரத்துக் குறித்து ஆராயும் ரொறன்ரோ நகரசபையின் கூட்டம் தற்போது ரொறன்ரோ நகரசபையில் நடைபெறுகின்றது.

இன்று .பின்னிரவு 11 மணிவரை இந்தத் கூட்டம் ரொறன்ரோ நகரசபையில் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நகரசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் 15 வருடகால போக்குவரத்து திட்டம் குறித்து விவாதிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரோரியின் நிர்வாக குழு தற்போது விவாதிக்கப்படும் போக்குவரத்து திட்டத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.

சிரியாவின் அகதிகளை கனடாவுக்கு தனிப்பட்ட முறையில்..

Thursday, March 31, 2016admin
asath

தொடரும் பொதுமக்களின் கண்டனங்களின் எதிரொலியாக சிரியாவின் அகதிகளை கனடாவுக்கு தனிப்பட்ட முறையில் வரவழைக்கும் திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கனடாவின் குடிவரவுத்துறை அமைச்சு இன்று முதல் இந்த மாற்றங்களை மேற்கொள்கின்றது.

இந்த வருடத்தின் இறுதிக்குள் மேலதிகமாக 10 ஆயிரிம் சிரிய நாட்டின் அகதிகளை கனடாவுக்குள் வரவழைக்கும் வகையில் இந்தத் திட்டமாற்றம் அமையவுள்ளது.

ரோப் போட்டின் மறைவின் பின்னர் இன்று முதலாவது தடவையாக..

Thursday, March 31, 2016admin
asath

ரோப் போட்டின் மறைவின் பின்னர் இன்று முதலாவது தடவையாகக் கூடிய ரொறன்ரோ நகரசபை உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்றைய கூட்டத்தை ஆரம்பித்து பேசிய நகரபிதா ஜோன் ரோரி,ரோப் போட்டின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதன் பின்னர் பல நகரசபை உறுப்பினர்களுக்கு ரோப் போட்டிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உரை நிகழ்ந்தினர்

இதேவேளை ரோப் போட்டின் பதவி வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது என்பது குறித்து உடனடியாக தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாது என நகரபிதா அலுவலகம் தெரிவிக்கின்றது.

அமெரிக்கா வர்த்தக சம்மேளனத்தில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ..

Thursday, March 31, 2016admin
asath

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை மனதில் கொண்டே அமெரிக்க வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கூறியுள்ளார்.

இன்று காலை அமெரிக்கா வர்த்தக சம்மேளனத்தில் உரையாற்றியபோது ஜஸ்டின் ரூடோ இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் வாசிங்டனில் இன்றும் நாளையும் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பிரதமர் ரூடோ அமெரிக்கா பயணமாகிவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.